‘இன உறவுகள் தொடர்பில் இளையரிடம் வேறுபட்ட அணுகுமுறை’

சிங்கப்பூரில் இன உறவுகளைப் பொறுத்தவரையில், இளம் தலைமுறையினர் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார். இதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
சிங்கப்பூருக்குப் பலன் தரக்கூடிய ஏற்பாடு ஒன்றைக் காணவேண்டிய தேவை இருக்கிறது என்று தெரிவித்த அமைச்சர் சண்முகம், இளம் தலைமுறையினரே  எதிர்கால தலைவர்களாக இருப்பார்கள் என்பதைச் சுட்டினார். 

இனங்களுக்கு இடையிலான உறவு போன்றவற்றை வழிவழியான முறைகளுக்கு அப்பாற்பட்டு வேறு வழியில் விவாதிக்க வேண்டியது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்தப் புதிய ஏற்பாடு கருத்தில் கொள்ளவேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

அண்மைய பொதுத் தேர்தலில் நீ சூன் தொகுதியில் களம் இறங்கிய மக்கள் செயல் கட்சி அணிக்கு அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி வெற்றிபெற்றார். 
அதனை அடுத்து அவர் தன் தொகுதிக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்தத் தேர்தலில் செங்காங் என்ற புதிய குழுத்தொகுதி உருவாக்கப்பட்டு இருந்தது. அதில் கடுமையான போட்டி நிலவியது. கடைசியில் பாட்டாளிக் கட்சி 52.13 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. 

செங்காங்கில் வென்ற எதிர்த்தரப்பு அணியில் திருவாட்டி ரயீசா கான் என்பவர் ஒரு வேட்பாளர். இன அல்லது சமய அடிப்படையில் வெவ்வேறான பிரிவுகளுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் 2018 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டு மே மாதத்திலும் சமூக ஊடகத்தில் திருவாட்டி ரயீசா கான் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் அவருக்கு எதிராக புகார் தாக்கலாகி இருக்கிறது என்று போலிஸ் ஜூலை 5ஆம் தேதி குறிப்பிட்டது. அதே நாளன்று திருவாட்டி ரயீசா கான் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் மசெக தெரிவித்த கருத்துகளும் திருவாட்டி ரயீசா கான் வேட்பாளராக நிறுத்தப்பட்டதும் செங்காங்கில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறதா என்று கேட்டபோது அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 
இருந்தாலும் பொதுவாக பரந்த அளவில் அமைச்சர் கருத்து கூறினார்.

இன, சமய விவகாரங்கள் எப்படி விவாதிக்கப்படும் என்பது பற்றி முதிய தலைமுறை சிங்கப்பூரர்கள் ஒருவித அணுகுமுறையை, சட்டத்துக்கு உட்பட்ட ஓர் ஏற்பாட்டைக் கொண்டு இருந்தனர் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் இளம் தலைமுறையினர் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார். 

செங்காங் தேர்தல் முடிவு வியப்பளிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார். 2015 பொதுத் தேர்தலில் பெற்ற அளவுக்கு (69.9%) இந்தத் தேர்தலில் மசெகவுக்கு வாக்குகள் (61.24%) கிடைக்காதது பற்றி கருத்து கூறிய அமைச்சர் கா சண்முகம், இது பற்றி கவனமாக ஆராயவேண்டி இருக்கிறது என்றார்.