சமூகத்திற்குப் பங்காற்றும் தொழில்நுட்ப குரு

V.K. சந்தோ‌ஷ் குமார் 

“நாம் ஆசிய நூற்றாண்டில் வாழ்கிறோம்” என்ற உண்மையான நம்பிக்கையின் காரணமாக, திரு பிராந்திக் மஜும்தர் ஆசியாவில் உயர்கல்வி படிக்க விருப்பப்பட்டார். 

“அதனால்தான் மேல்படிப்புக்காக நான் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்ல விரும்பவில்லை,” என்றார் அவர். 

“பொருளியல் வளர்ச்சியின் மையத்தில் இருப்பதால் சிங்கப்பூரைச் சிறந்த தெரிவாகக் கருதினேன். அதோடு, சிங்கப்பூர் அரசியல் வலிமையும், நிலைத்தன்மையும், திறனை மதிக்கும் சூழலையும் கொண்டிருக்கிறது.” 

வங்காள இனத்தைச் சேர்ந்த அவர், இந்தியாவின் பூனே நகரில் வளர்ந்தார். அவரது பெற்றோர் இந்தோனீசியத் தலைநகரில் குடியேறிய பிறகு, ஜகார்த்தாவில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். அதன்பின்னர், 2001 ஜூலை மாதம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறையில் (கணினிப் பொறியியல்) இளநிலைப் பட்டமும், தொழில்நுட்பத் தொழில்முனைப்பில் துணைப்பட்டமும் படிக்க முடிவெடுத்தார். அன்றிலிருந்து சிங்கப்பூரை அவர் தனது இல்லமாக்கிக் கொண்டார். 

“வீட்டு ஞாபகத்தால் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஏக்கம் தவிர, சிங்கப்பூர் வாழ்க்கையைப் பழக்கப்படுத்திக் கொள்வது ஓரளவு எளிதாகவே இருந்தது,” என்றார் அவர். 

“பல கலாசார சூழல், தொழில்நுட்ப மேம்பாடுமிக்க உள்கட்டமைப்புகள், செயலாற்றலுடன் பயன்மிகுந்த ஒட்டுமொத்த நடைமுறை ஆகியன உதவியாக இருந்தன. 

“இந்தியாவிலும் இந்தோனீசியாவிலும் வளர்ந்த பிறகு, சிங்கப்பூரில் வாழ்க்கை சுலபமாக இருந்தது. திட்டவட்டமான அறிமுக நிகழ்ச்சியின்மூலம் நான் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருந்த பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவர்களுக்கும் எனது கல்வித் துறைக்கும் நான் நன்றி சொல்வேன்.” 

தொழில்நுட்பத்துடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி என்பதைத் திரு மஜும்தர் புரிந்துகொள்வதற்குக் கணினிப் பொறியியல் கல்வி உதவியது. அதே சமயத்தில், தொழில்முனைப்பு என்னவென்பதைத் தொழில்நுட்பத் தொழில்முனைப்புக் கல்வி சொல்லித்தந்தது. புதிய பொருள் தயாரித்தல், தொழில் திட்டம் வகுத்தல், வர்த்தகச் சின்னத்தை உருவாக்குதல், சந்தைப்படுத்தல், தொழில் நடைமுறைகளை இயக்குதல் போன்றவற்றை அவர் கற்றுக் கொண்டார். 

“இந்தத் துணைப்பட்டம் தொழில்முனைப்பு ஆர்வத்தை விதைத்தது. அதன் பலனாக, சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு “Happy Marketer” எனும் தரவு சார்ந்த மின்னிலக்கச் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை நான் கூட்டாகத் தொடங்கினேன்,” என அவர் விவரித்தார். 

“கல்வியறிவுக்கு அப்பால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும், பற்பல துறைகளின் வகுப்புகளில் கலந்துகொள்ளவும் பல்கலைக்கழக அனுபவம் எனக்கு வாய்ப்பளித்தது. அதுமட்டுமன்றி, பல்கலைக்கழக கிரிக்கெட் குழுவின் கேப்டனாகவும், எனது தங்குவிடுதியின் உதவியாளராகவும் பொறுப்பேற்றதன் மூலம் ஒரு தலைவனாக இருக்கவும் கற்றுக்கொண்டேன். 

“சிங்கப்பூர் எனக்கு ஒரு முற்போக்கான கல்வித் தளத்தையும், அனுபவக் கல்வி பெறுவதற்கு உகந்த பல கலாசார, உலகமயச் சூழலையும், பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பொருளியல் வாய்ப்புகளையும் வழங்கியது.” 

பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பிறகு, சிங்கப்பூர் அனைத்துலக தொழில் மேம்பாட்டு வாரியத்தில் மூத்த அதிகாரியாகச் சேர்ந்தார் திரு மஜும்தர். 

“கடந்த இருபது ஆண்டுகளில், சிங்கப்பூர் அரசாங்கச் சேவையிலும், உள்ளூர் தனியார் துறையில் இரு சிறிய, நடுத்தர நிறுவனங்களிலும், இரு சேவைத் தொழில்முனைப்புகளைக் கூட்டாக நிறுவிய தொழில்முனைவராகவும், எங்களது தொழில்முனைப்பை நாங்கள் விற்ற பன்னாட்டு நிறுவனத்திலும், ஆரம்பநிலை முதல் பின்னிலை வரையிலுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளராகவும் மாறுபட்ட பணிகளில் ஈடுபடும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது,” என்று அவர் கூறினார். 

“சிங்கப்பூரின் செயல்முறை எனக்கு மிகவும் நியாயமாகவும் கனிவாகவும் இருந்திருக்கிறது. ஒரு குடியேறியாக, இதைவிட மேலும் முற்போக்கான, திறனுக்கு அங்கீகாரம் அளிக்கும் தளத்தை நான் எதிர்பார்க்க முடியாது.

“தொழில்சார்பு முறையிலும், பொது மற்றும் தனியார் துறைகளில் பற்பல பரிமாணங்களிலான வாய்ப்புகளை சிங்கப்பூர் எனக்கு வழங்கியிருக்கிறது. என்னுள் இருக்கும் தொழில்முனைவரை வளர்த்து ஆளாக்கி, ஒரு மாற்றத்தை உண்டாக்க எனக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறது.” 

திரு மஜும்தர் 2001ல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, பணவசதி இல்லாத ஒரு காரணத்தினால், தகுதிபெறும் எந்தவொரு மாணவரும் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துவிடமாட்டார் என ஒரு நிர்வாகி குறிப்பிட்டிருந்தார். அது அவரது மனதில் ஆழப் பதிந்துவிட்டது. 

“எனக்குக் கிடைத்த சமமான வாய்ப்புகளால் எவ்வளவு நற்பேறும் பாக்கியமும் அடைந்திருக்கிறேன் என்பதையும் அது என்னை உணரச் செய்தது,” என்றார் அவர். 

“இந்த எண்ணங்கள், சமூகத்திற்குப் பங்காற்றவேண்டும் என்ற என் விருப்பத்தை மட்டுமன்றி, என் நண்பர்களையும் தொடர்புகளையும் ஒன்றுதிரட்டி பெரிய அளவில் தொடர்ந்து பங்களிப்பதில் இருந்த நாட்டத்தையும் திடப்படுத்தியது – பணமாக மட்டுமல்லாமல் நேரத்தையும் திறனையும் பங்களிக்கத் தூண்டுகோலாக இருந்தது. 

“தரமான கல்வி ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடியது. ஏனெனில், கல்வி ஒருவருக்கு அறிவை வழங்குவதோடு, பொருளாதார வாய்ப்புகளின்மூலம் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைவதற்கும் வழிவகுக்கக்கூடியது – இந்தப் பாக்கியத்தால் நானும் நன்மை அடைந்திருக்கிறேன்.”

திரு மஜும்தரும் அவரது தொழில் பங்காளி, நண்பர், சக பல்கலைக்கழக மாணவருமான ரச்சித் தயாளும், 2011ல் மின்னிலக்கச் சந்தைப்படுத்தலில் இலவசப் பயிற்சியும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளும் வழங்கத் தொடங்கினார்கள். பலதுறைத் தொழில்கல்லூரிகள், raiSE (சமூகத் தொழில்முனைவர்களுக்கு), மெண்டாக்கி (மலாய் முஸ்லிம்களுக்கு), சிங்கப்பூர் காது கேளாதோர் சங்கம் போன்றவை இதன்மூலம் பயனடைந்தன. 

இவர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்கல்வி வாய்ப்புகள் கிடைக்க உதவும் நடைமுறைப் பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்வது அவர்களின் இலக்கு. 

வேலை தேடும் மூத்த குடிமக்களுக்கும் மலாய் முஸ்லிம் சமூகத்தினருக்கும் வேலை கிடைக்க உதவியாக, அவர்களது சுயவிவர, மின்விவரக் குறிப்புகளை மேம்படுத்தவும் இவ்விருவரும் ஆதரவளித்து வருகின்றனர். 

இயலாமைகள் உள்ளவர்களுக்குத் திறனுக்கேற்ற வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களையும் வேலைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளனர். 

எடுத்துக்காட்டாக, 40 வயதுகளின் மத்தியில் உள்ள திருவாட்டி லூசி இங், வேலை கேட்டு திரு பிராந்திக்கை அணுகினார். 

திருவாட்டி லூசி தனது சுயவிவரக் குறிப்பை மேம்படுத்த திரு பிராந்திக் ஆலோசனை வழங்கினார். அதோடு, மின்னிலக்கச் சந்தைப்படுத்தலிலும் திருவாட்டி லூசிக்குப் பயிற்சி அளித்து, வேலை இடத்திற்கு அவரை அதிக பொருத்தமானவராக்கினார். 

திருவாட்டி லூசி பின்னர் Happy Marketer நிறுவனத்தின் நிதி, செயலியக்கப் பிரிவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். சில ஆண்டுகளுக்குமுன் அவர் வேலையிலிருந்து விலகினார். 

“நான் அதுவரை அறிந்திராத புதிய, விறுவிறுப்பான பாதையை Happy Marketer அமைத்துக் கொடுத்தது,” என்றார் திருவாட்டி லூசி. 

“மின்னிலக்கமயமான எதிர்காலத்திற்குத் தேவைப்படும் அனைத்து திறன்களையும் நான் கற்றுக்கொள்ள உதவிய மின்னிலக்க வித்தகர் பிராந்திக். அவருடன் சேர்ந்து வேலை செய்தது என் பாக்கியம்.” 

Merkle Singapore நிறுவனத்தின் திறன், கலாசாரப் பிரிவின் இயக்குநரான திருவாட்டி மீலா அன்வர், “பிராந்திக் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோருக்கு மின்னிலக்கச் சந்தைப்படுத்தலில் பயிற்சி அளித்து உதவி செய்திருக்கிறார்,” என்று கூறினார். 

“அவரது பயிற்சி அங்கங்களில் ஒன்று, மூத்தோருக்காகவும் மலாய் முஸ்லிம் சமூகத்தினருக்காகவும் நடத்தப்படுகிறது. அவரது பயிற்சி அணுகுமுறை அற்புதமானது. பல உதாரணங்களும் கேள்வி பதில் அங்கங்களும் கொண்டது. பலரும் மேம்பட்ட வேலைகளைத் தேடிக்கொள்ள அவர் உதவி செய்திருக்கிறார்.” 

திரு மஜும்தரும் திரு தயாளும் அண்மையில் “Happy Marketer” கல்வி உதவி நிதியைத் தொடங்கினர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தகுதியுள்ள, குறிப்பாகத் தொழில்முனைப்பில் தீவிர நாட்டமுள்ள, மாணவர்களுக்கு இந்த உதவி நிதி பொருளாதார ஆதரவு வழங்கும். 

“பிராந்திக், ரச்சித் இருவருமே சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். அவர்கள் படித்த பல்கலைக்கழகத்திலேயே “NOC முன்னாள் மாணவர் - Happy Marketer கல்வி உதவி நிதியை” இருவரும் அமைத்திருப்பது அற்புதமானது,” என்றார் என்யுஎஸ் வெளிநாட்டுக் கல்லூரிகளின் (NOC) மூத்த துணைத் தலைவர், கல்விப் புரவலர், இயக்குநர் அலுவலகத்தின் துணைக் கல்விப் புரவலர் (தொழில்நுட்பம் – மேம்பட்ட, அனுபவ ரீதியான கற்றல்) பேராசிரியர் சீ இயோ மெங். 

“பல்கலைக்கழகத்தின் தகுதிபெறும் மாணவர்களுக்கு நிதி ஆதரவளிக்க இது துணை புரியும். ஆதரவு பெறுவோரில் சிலராவது இவர்களைப்போல் தங்களது தொழில்முனைப்புக் கனவுகளை அடைய முயற்சி செய்வார்கள் என நம்புகிறோம்.” 

திரு மஜும்தர், 39, தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசர சிகிச்சை மருத்துவராகப் பணிபுரியும் அவரது மனைவி டாக்டர் தீப்தி கமத் இருவரும், இரண்டு மருத்துவ அறப்பணி அமைப்புகளுக்கும் ஆதரவளித்து வருகின்றனர். அவை சியன் சே மருத்துவ நிலையம், சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம். 

மேலும், Milaap.org நிதி திரட்டுத் தளத்தின் வாயிலாக மாதர் கல்விக்கும் சுகாதாரத் தூய்மை தொடர்பான முனைப்புகளுக்கும் நன்கொடை வழங்கி வருகின்றனர். 

“சிறிய, அர்த்தமுள்ள வழியில் பங்களிக்க இயல்வது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஏனெனில், என் கடமையை என்னால் நிறைவேற்ற முடிகிறது – இதுவும் ஒரு பாக்கியம், ஒரு வாய்ப்பு,” என்றார் திரு மஜும்தர். 

“பலதரப்பட்ட பின்னணிகளைச் சேர்ந்த மக்களுடன் பேசிப் பழகவும், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் எனக்கு உதவுகிறது. அதோடு, வாழ்க்கையைப் பற்றிய அவசியமான கண்ணோட்டத்தையும் எனக்குத் தருகிறது. 

“நான் தலைகனம் இல்லாமல் தன்னடக்கத்துடன் இருப்பதற்கும், சமமான வாய்ப்புகள் எனக்கு எப்போதும் கிடைத்தன என்பதை நினைவில் கொள்ளவும் உதவுகின்றன.” 

நிரந்தரவாசியான இவர், சிங்கப்பூரைத் தனது நிரந்தர இல்லமாக்கிக்கொள்ள நினைக்கிறார். 

“நான் 21 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறேன். வேறெந்த நகரிலும் அல்லது நாட்டிலும் நான் இத்தனைக் காலம் வாழ்ந்ததில்லை,” என்றார் அவர். 

“வாழ்க்கை கணிக்க முடியாததாக இருந்தாலும், நாங்கள் எதிர்பார்க்கும் வருங்காலத்தில் சிங்கப்பூரையே எங்களது அடிப்படை இல்லமாகப் பார்க்கிறோம், கருதுகிறோம்.”

 

Gov.sg-உடன் கூட்டாகப் படைக்கப்படும் இந்த ஆறு பாகத் தொடரின் இரண்டாவது பாகம், சிங்கப்பூரைத் தங்களது இல்லமாக்கிக்கொள்ள அரும் முயற்சி எடுத்தவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் அனுபவங்களையும் ஆராய்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!