மண்டாய் வனவிலங்குப் பூங்காவில் ‘பேர்ட் பேரடைஸ்’ பறவைக் காட்சி மே 8ஆம் தேதி திறக்கப் படுகிறது. அன்று முதல் மே 26 வரை சலுகைக் கட்டணத்தில் இந்தக் காட்சியைக் காணலாம்.
பெரியவர்களுக்கு $38, 3 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு $23, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு $20 என்று சலுகைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மண்டாய் வனவிலங்குக் குழுமம் வியாழக்கிழமை (மார்ச் 30) கூறியது.
மே 27ஆம் தேதி முதல் இந்தக் கட்டணம், பெரியவர்களுக்கு $48 ஆகவும் சிறார்களுக்கு $33 ஆகவும் தலா $10 அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும். மூத்தோருக்கு $20 என்பது மாற்றமின்றி தொடரும்.
நடந்து சென்றவாறே பார்த்து மகிழக்கூடிய எட்டு பறவைக் காட்சிக் கூடங்கள் பேர்ட் பேரடைசில் இருக்கும்.
பூங்காவின் ‘ஸ்கை ஏம்ஃபிதியேட்டரில்’ புதிதாக இரு பறவைக் காட்சிகள் நடைபெறும். தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பேர்ட் பேரடைஸ் திறந்திருக்கும். ஆகக் கடைசியாக மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
பறவைகள் மற்றும் அவற்றின் கதைகளை உள்ளடக்கிய ஒரு கொண்டாட்டமாக பேர்ட் பேரடைஸ் அமையும் என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்துள்ளது. ஏராளமான ஹார்ன்பில்ஸ் பறவைகளை இங்கு காணலாம் என்றும் அது தெரிவித்தது.
ஜூரோங் பறவைப் பூங்கா கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. அங்கிருந்த ஏறக்குறைய 3,500 பறவைகள் மண்டாய்க்கு மாற்றப்பட்டதாக குழுமத்தின் தலைமை நிர்வாகி மைக் பார்க்லே கூறினார்.
“இந்த மாபெரும் பறவை இடமாற்றம் பறவைகளுக்கும் ஊழியர்களுக்கும் முதல்முறை கிடைத்த அனுபவம்,” என்றார் அவர்.

ஜூரோங் பறவைப் பூங்கா கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. அதையடுத்து பேர்ட் பேரடைஸ் திறக்கப்படுகிறது. படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்