புக்கிட் கோம்பாக் தனித்தொகுதியில் மசெக வெற்றி

2 mins read
c008e8c1-f42f-4d56-bc66-f07f6aea256b
புதிய புக்கிட் கோம்பாங் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் திருவாட்டி லோ யென் லிங் 75% வாக்குகளை வென்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிதாக வரையறுக்கப்பட்ட புக்கிட் கொம்பாக் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் வெற்றிப்பெற்றுள்ளார்.

அவர் 75.83% வாக்குகளை வென்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஹரி‌ஷ் பிள்ளையைப் பின்னுக்குத் தள்ளினார். திரு ஹரி‌ஷ் 24.17% வாக்குகளைப் பெற்றார்.

இவ்வாண்டு தேர்தல் தொகுதி எல்லை புதிதாக வரையறுக்கப்பட்டதில் சுவா சூ காங் குழுத்தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த புக்கிட் கோம்பாக் தொகுதி புதிய தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவற்றின் மூத்த துணையமைச்சரான திருவாட்டி லோ, சுவா சூ காங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று தவணைக் காலத்துக்குச் சேவையாற்றினார்.

2011ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்த திருவாட்டி லோ, 14 ஆண்டுகள் புக்கிட் கோம்பாக் தொகுதியில் இருந்தார்.

திருவாட்டி லோவின் வெற்றி அறிவிக்கப்பட்டதை அடுத்து புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் கூடியிருந்த மக்களின் உற்சாகம் கரைபுரண்டது.

திருவாட்டி லோ
திருவாட்டி லோ - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது குடியிருப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு திருவாட்டி லோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இந்த வெற்றிக்கு எமது குடியிருப்பாளர்கள்தான் காரணம்,” என்ற திருவாட்டி லோ, “உங்களுடன் சேர்ந்து புக்கிட் கோம்பாக்கின் எதிர்காலத்தை உருவாக்குவேன்,” என்று மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருவாட்டி லோ, துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோருடன் சுவா சூ காங் குழுத்தொகுதியில் களமிறங்கிய மக்கள் செயல் கட்சி அணி 58.64 விழுக்காடு வாக்குகளை வென்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை வென்றது.

குறிப்புச் சொற்கள்