எல்லாப் பிரிவுகளிலும் சிஒஇ கட்டணம் குறைந்தது

1 mins read
eb635afe-111d-4866-8d71-3f2daace7cd8
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் (சிஒஇ) எல்லாப் பிரிவுகளிலும் குறைந்துள்ளன.

ஆக அண்மைய சிஒஇ கட்டண ஏலக்குத்தகை நடவடிக்கையில் கட்டணங்கள் குறைந்தன.

சிறிய, குறைந்த சக்திவாய்ந்த கார்களுக்கும், சிறிய மின்சார கார்களுக்குமான ஏ பிரிவில் சிஒஇ கட்டணம் 2.9 விழுக்காடு குறைந்து 99,889 வெள்ளியாகப் பதிவானது.

பெரிய, கூடுதல் சக்திவாய்ந்த கார்களுக்கும் மின்சார கார்களுக்குமான பி பிரிவில் கட்டணம் 5.2 விழுக்காடு குறைந்து 108,001 வெள்ளியாகப் பதிவானது.

பொதுப் பிரிவான இ பிரிவிலும் சிஒஇ கட்டணம் குறைந்தது. அப்பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் 114,700 வெள்ளியிலிருந்து 109,000 வெள்ளிக்குக் குறைந்தது.

பொதுப் பிரிவில் மோட்டார்சைக்கிள்களைத் தவிர எல்லா வாகனங்களையும் பதிவுசெய்யலாம். அதேவேளை, அப்பிரிவில் பொதுவாக பெரிய கார்கள்தான் இடம்பெற்று வருகின்றன.

வர்த்தக வாகனங்களுக்கான சி பிரிவில் சிஒஇ கட்டணம் 6.3 விழுக்காடு குறைந்து 68,340 வெள்ளியாகப் பதிவானது.

மோட்டார்சைக்கிள்களுக்கான டி பிரிவில் கட்டணம் 9,589 வெள்ளியிலிருந்து 9,089 வெள்ளியாகக் குறைந்தது.

கடந்த ஆகஸ்டிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் விடப்பட்டவற்றைவிட 3.6 விழுக்காடு அதிகமான சிஒஇ சான்றிதழ்கள் ஏலத்துக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவே, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சிஒஇ கட்டண ஏலக்குத்தகை நடவடிக்கையாகும்.

குறிப்புச் சொற்கள்