மேம்படுத்தப்பட்ட திட்டத்துடன் நீண்டகால பராமரிப்புக்குத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்

3 mins read
cff95248-1e6e-474c-be01-83e906a89d06
-

கேர்ஷீல்ட் லைஃப் எல்டர்ஷீல்டை காட்டிலும் எவ்வகையில் சிறந்தது?

தேசிய உடற்குறை காப்புறுதி திட்டமான கேர்ஷீல்ட் லைஃப் எல்டர்ஷீல்ட் திட்டத்துக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம் கூடுதல், வாழ்நாள் வழங்குதொகைகளின்மூலம் அதிக பாதுகாப்பை தருகின்றது.

தற்போது எல்டர்ஷீல்ட் திட்டத்தில் நான் இணைந்துள்ளேன். கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்திலும் நான் இணையலாமா?

தீவிர உடற்குறை இல்லாத பட்சத்தில், தற்போது தங்களிடம் உள்ள எல்டர்ஷீல்ட் திட்டத்தை நீங்கள் கேர்ஷீல்ட் லைஃப் திட்டமாக மாற்றிக்கொள்ளலாம். கேர்ஷீல்ட் லைஃபுக்கு மாறியதன் பின்னர் தங்களது எல்டர்ஷீல்ட் திட்டம் முற்று பெறும் என்பதால், இரட்டிப்பு காப்புறுதி கிடையாது. எல்டர்ஷீல்டுக்கு தாங்கள் செலுத்திய சந்தா கட்டணங்கள் கேர்ஷீல்ட் லைஃபின் சந்தா கட்டண கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். www.careshieldlife.gov.sg இணையப்பக்கத்தில் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம்.

1979ஆம் ஆண்டிலோ அதற்கு முன்னரோ பிறந்தவர் நான். முன்பிலிருந்தே இருக்கும் மருத்துவ சிக்கல்களுடன் நான் கேர்ஷீல்ட் லைஃபில் இணைந்தால் கூடுதல் சந்தா கட்டணங்களை நான் கட்டவேண்டி வருமா?

தாங்கள் 1979ஆம் ஆண்டிலோ அதற்கு முன்னரோ பிறந்தவராகவும், தீவிர உடற்குறை இல்லாதவராகவும் இருக்குமாயின், முன்பிலிருந்தே இருக்கும் மருத்துவ சிக்கல்களுடன் தாங்கள் கேர்ஷீல்ட் லைஃபில் இணையலாம். முன்பிலிருந்தே இருக்கும் மருத்துவ சிக்கல்களுக்கு தாங்கள் கூடுதல் சந்தா கட்டணங்கள் செலுத்த தேவையில்லை.

கேர்ஷீல்ட் லைஃப் காப்புறுதி சந்தா கட்டணங்களை நான் எவ்வாறு செலுத்தலாம்? எந்தெந்த வகையிலான ஆதரவை நான் நாடலாம்?

உங்களின் மெடிசேவ் கணக்கைக் கொண்டோ, குடும்ப உறுப்பினர்களின் மெடிசேவ் கணக்கைக் கொண்டோ, ஆண்டுதோறும் செலுத்தப்படும் காப்புறுதி சந்தா தொகையை முழுமையாக செலுத்தலாம். மேலும், அரசாங்கம் கீழ்காணும் வழிகளில் ஆதரவு வழங்குகின்றது: ♦ குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்களுக்கு கேர்ஷீல்ட் லைஃபின் அடிப்படை காப்பறுதி சந்தா தொகையில் 30 விழுக்காடு வரை பணவசதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தா தொகை நிதி உதவி. ­♦ கேர்ஷீல்ட் லைஃபில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணையும் 1979இல் அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களுக்கு $2,500 வரை பங்கேற்றல் ஊக்குவிப்புத் தொகை. ♦ கேர்ஷீல்ட் லைஃபில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணையும் மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறை குடிமக்களுக்கு $1,500 கூடுதல் பங்கேற்றல் ஊக்குவிப்புத் தொகை.

உங்களது மெடிசேவ் சேமிப்பில் போதிய பணம் இல்லாத நிலையிலோ, குறைவான அளவிலே குடும்ப ஆதரவு இருக்கும் நிலையிலோ, 'காப்புறுதிச் சந்தா செலுத்த கூடுதல் ஆதரவு' திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ய நீங்கள் அழைக்கப்படுவீர். உண்மையிலேயே சந்தா கட்டணங்களை செலுத்த இயலாத நிலையில் உள்ள யாரும் தங்களது காப்புறுதியை இழக்கமாட்டார்கள்.

இணைந்ததன் பின்னர் கேர்ஷீல்ட் லைஃபிலிருந்து என்னால் விலக முடியுமா?

1979 ஆம் ஆண்டிலோ, அதற்கு முன்னரோ பிறந்தோர் கேர்ஷீல்ட் லைஃபில் இணைய பதிவு செய்யும்போது, கேர்ஷீல்ட் லைஃப் காப்புறுதி தொடங்கும் சமயத்திலிருந்து 60 நாட்களுக்கு 'ஃப்ரீ-லுக்' காலவரை வழங்கப்படும். அதாவது, முதல் அறுபது நாட்களில் தாங்கள் விலக முடிவெடுத்தால், காப்புறுதி சந்தா கட்டணத்தை தாங்கள் திரும்பப் பெறுவீர்கள். முன்பு எல்டர்ஷீல்ட் 300 அல்லது 400 திட்டத்தில் நீங்கள் இருந்திருந்தால், அத்திட்டம் மீட்டெடுக்கப்படும். 60 நாள்களுக்குள் தாங்கள் விலகவில்லை எனில், வாழ்நாளுக்கும் கேர்ஷீல்ட் லைஃப் உங்களுக்கு காப்புறுதி வழங்கும்.

கேர்ஷீல்ட் லைஃபில் வழங்குதொகைகளைக் கோருவதற்குச் செய்யவேண்டியவை யாவை?

முதலில், சுகாதார அமைச்சால் சான்றளிக்கப்பட்ட உடற்குறை தேர்வாளர்கள் அளிக்கும் சோதனையை நீங்கள் மேற்கொள்ளவேண்டும். சாப்பிடுதல், அலம்புதல், கழிவறை பயன்பாடு, நடப்பது அல்லது நகர்வது, ஆடை அணிதல், ஒரு படுக்கையிலிருந்து நாற்காலிக்கு மாறுவது ஆகிய ஆறு தினசரி வாழ்வியல் நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் மூன்றினை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், நீங்கள் கேர்ஷீல்ட் லைஃபின் வழங்குதொகைக்கு தகுதிபெறுவீர். தீவிர உடற்குறை நீடிக்கும் வரையில் தாங்கள் வழங்குதொகைகளைப் பெறுவீர். இக்காலக்கட்டத்தில் காப்புறுதி சந்தா கட்டணங்களில் தள்ளுபடிகள் உண்டு.