சாங்கி விமான நிலையத்தில் $2,600க்கும் அதிக பெறுமானமுள்ள 10 வாசனை திரவிய போத்தல்களைத் திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் வெளிநாட்டுப் பயணிகள் என்றும் 22 வயதான அவர்களை விமானப் போக்குவரத்து இடைவழிப் பயணப் பகுதியில் நவம்பர் 25ஆம் தேதி கைது செய்ததாகவும் டிசம்பர் 5ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
162 வெள்ளி மதிப்புள்ள வாசனை திரவிய போத்தல்கள் அடங்கிய பெட்டி ஒன்று காணாமற்போனதை அறிந்த சில்லறை விற்பனை நிலைய ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவ்விடத்திலிருந்த காணொளி கருவிகளில் பதிவான படங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளை 45 நிமிடங்களில் கண்டறிந்தனர்.
சிங்கப்பூரிலிருந்து அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் காவல்துறையினர் அந்த ஜோடியைக் கைது செய்தனர்.
ஒரே நாளில் இடைவழிப் பயணப் பகுதியில் உள்ள மற்ற விற்பனை நிலையங்களிலிருந்து $2,500க்கும் அதிகமான மதிப்புள்ள ஒன்பது வாசனை திரவிய போத்தல்களை அவர்கள் திருடியதாகக் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்பட்டது.
அவர்கள் இருவர்மீதும் டிசம்பர் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படுகிறது.

