சரே ஹில்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனர் பாங் கெக் டெங்மீது மோசடி குற்றச்சாட்டு

சரே ஹில்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனர் பாங் கெக் டெங்மீது மோசடி குற்றச்சாட்டு

1 mins read
6579633a-14d7-4a6e-9590-e34a5288c259
சரே ஹில்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்த 37 வயது பாங் கெக் டெங் மற்றொரு பெண்ணிடமிருந்து $400,000க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து பெற்றதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சரே ஹில்ஸ் பலசரக்கு உணவு பானக் கடையை நிர்வகிக்கும் சரே ஹில்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பாங் கெக் டெங் என்ற அந்த 37 வயது பெண், நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றொரு பெண்ணிடமிருந்து $400,000க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து பாங் பெற்றதாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கை மோசடி, ஏமாற்ற முயன்றது, போலியாகக் கையெழுத்திட்டது உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகளைப் பாங் எதிர்நோக்குகிறார்.

சிங்கப்பூரரான பாங், 2018ஆம் ஆண்டிற்கும் 2019ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மற்றொரு பெண்ணை ஏமாற்றி எட்டு முறை பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ‘டெஸ்மன்ட்’, ‘டெரிக்’ என இரண்டு ஆடவரைப் போல பாங் தம்மைக் கூறிக்கொண்டு பெண்ணை ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.

பெண்ணின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு அவரது கணவர் சிராங்கூன் கார்டனில் உள்ள வங்கி ஒன்றுக்குச் சென்றதாகக் கூறிய பாங், பெண்ணின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க ‘டெரிக்’ என்பவரின் வங்கிக்கு அதை மாற்றிவிடும்படி கூறினார்.

அதை நம்பிய பெண், ‘டெரிக்’ போல தம்மைக் காண்பித்துக்கொண்ட பாங்கின் வங்கிக் கணக்கிற்கு $191,700 தொகையை அனுப்பிவைத்தார்.

பாங்கின் வழக்கு ஜூலை 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

பாங்மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சம் 10 ஆண்டுவரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மோசடிகுற்றச்சாட்டுநீதிமன்றம்