எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் பொது நிதியளிப்பை நிர்வகிக்கும் முறையில் ஒழுங்கீனம் அல்லது குறைபாடுகள் இருப்பதாகவும் கடுமையான தவறுகள் நடப்பதாகவும் எதிர்காலத்தில் கண்டறியப்பட்டால், நிதியளிப்பை நிறுத்தும் உரிமை அரசாங்கத்திற்கு இருப்பதாகத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.
எஸ்பிஹெச் மீடியா டிரஸ்டுக்கான முதல் நிதியளிப்பு மார்ச் மாதம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தனது செய்தித்தாள் விநியோகப் புள்ளிவிவரங்களை மிகைப்படுத்தியதாகக் கண்டறிந்த அறிக்கையின் நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த நிதி வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அந்த விவகாரத்தின்போது பொது நிதி ஏதும் வழங்கப்படவில்லை.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அன்றாடச் செய்தித்தாள் விநியோகப் புள்ளிவிவரங்களை மிகைப்படுத்தியதாக சிங்கப்பூர் மீடியா டிரஸ்ட்டின் தணிக்கை, இடர் குழு ஜூன் 21ம் தேதி வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாயும் எழுப்பிய கேள்விகளுக்குத் திருவாட்டி டியோ பதிலளித்தார்.
பொது நிதியளிப்பை நிர்வகிக்கும் முறையில் ஒழுங்கீனம் அல்லது குறைபாடுகள் இருந்தால் அரசாங்கம் குறுக்கிடும் என அவர் கூறினார்.
“அரசாங்கம் சொந்தமாக இடையிடையே தணிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்கும் பாதுகாப்புகளை உள்ளமைத்திருக்கிறோம். கடுமையான தவறுகள் கண்டறியப்பட்டால், நிதியளிப்பை நிறுத்த எங்களுக்கு உரிமையுண்டு.”
நிதியளிப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளைத் தொடர்பு, தகவல் அமைச்சு மறுஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.
செய்தித்தாள் விநியோகப் புள்ளிவிவர விவகாரத்தில் சில குற்றச்செயல்கள் நேர்ந்திருக்கலாம் என்று ஜூன் மாத அறிக்கை குறிப்பிட்டது. இதன் தொடர்பில் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் அதன் உள் கட்டுப்பாடுகளையும் இடர் நிர்வாகத்தையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அறிக்கை பட்டியலிட்டது.
இந்நிலையில், வாசகர்கள் இணையத்தை நாடுவதால் ஏற்பட்டுள்ள சவால்களை எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் எதிர்கொள்ள தொடர்பு, தகவல் அமைச்சு துணைபுரியும் என்று திருவாட்டி டியோ தெரிவித்தார்.
ஏற்கெனவே உறுதியளித்த தொகைகளை எஸ்பிஹெச் மீடியா டிரஸ்டுக்கு அரசாங்கம் நிதியாக வழங்கும் என்றும் அவர் கூறினார்.
எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் $180 மில்லியன் வரை அரசாங்க நிதியளிப்பைப் பெறும் என்று 2022 பிப்ரவரி மாதம் திருவாட்டி டியோ நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஏகப்பட்ட செய்தி மூலங்கள் எளிதில் கிடைத்தாலும், சிங்கப்பூர் வாசகர்கள் நம்பிக்கைக்குரிய செய்திகளுக்கு மத்திய ஊடகத்தையே நாடுவதாகத் திருவாட்டி டியோ கூறினார்.
எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட்டின் முக்கிய வெளியீடுகள் மீதுள்ள நம்பிக்கை உலகச் சராசரியைவிட அதிகமாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தித்துறை ஆய்வுக்கழகத்தின் 2023 மின்செய்தி அறிக்கை கண்டறிந்ததாக அவர் சொன்னார். ஆய்வின் பங்கேற்பாளர்களில் 73 விழுக்காட்டினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள்மீது நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தனர். இது 2022ம் ஆண்டைவிட மூன்று விழுக்காடு அதிகம்.
அதே சமயத்தில், உலகெங்கிலும் செய்திகளின் மீதுள்ள நம்பிக்கை 2022ன் 42 விழுக்காட்டிலிருந்து 2023ல் 40 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
ஊடகத் தொழில் எஸ்பிஹெச் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட்டுக்கு 2021 டிசம்பர் மாதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் சொந்தமாக மறுஆய்வு மேற்கொண்டதால்தான் புள்ளிவிவர விவகாரம் தலையெடுத்ததாகவும் திருவாட்டி டியோ சுட்டிக்காட்டினார்.
எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் நடைமுறைப்படுத்தியிருக்கும் திட்டங்களை அரசாங்கம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
“இது ஒரு தொடர் நடவடிக்கை. இத்திட்டங்கள் அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்த எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட்டுடன் தகவல், தொடர்பு அமைச்சு அணுக்கமாகச் செயல்படும்,” என்றார் அவர்.

