தாய்லாந்து நிலவழி இணைப்புத் திட்டத்தைப் பயன்படுத்தினால் அதிக செலவு: சீ ஹொங் டாட்

தாய்லாந்து நிலவழி இணைப்புத் திட்டத்தைப் பயன்படுத்தினால் அதிக செலவு: சீ ஹொங் டாட்

2 mins read
eaa4411a-9d19-44c2-8d41-9fedc76a734f
சிங்கப்பூரின் துறைமுகங்கள் சென்ற ஆண்டு 37.3 மில்லியன் இருபது அடி நீளக் கொள்கலன்களைக் கையாண்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாய்லாந்தின் தென்பகுதியில் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலவழி இணைப்புத் திட்டம் சில கப்பல்களுக்குப் பயண நேரத்தைக் குறைக்கக்கூடும்.

என்றாலும், மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகளைக் கடந்துசெல்வதைக் காட்டிலும், அது கப்பல் சரக்கு வணிகர்களுக்குச் செலவுமிக்கதாகலாம்.

தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

மிச்சப்படும் நேரம் பல அம்சங்களைப் பொறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதனால் கப்பல் சரக்கு நிறுவனங்கள் ஒட்டுமொத்த செலவுகளையும் அனுகூலங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

தாய்லாந்தின் கிழக்கு, மேற்குக் கடலோரப் பகுதிகளில் உள்ள இரண்டு புதிய கடல் துறைமுகங்களை இணைக்க 90 கிலோமீட்டர் சாலை, ரயில் கட்டமைப்பைக் கட்டுவதற்கான தாய்லாந்து அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குத் திரு சீ பதிலளித்தார்.

உலகின் சரக்கு வணிகத்தில் நான்கில் ஒரு பங்கு மலாக்கா நீரிணை வழியாகவே இடம்பெறும் நிலையில், புதிய திட்டம் அதனை உள்ளடக்குவதில்லை.

பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டத்தால், ஆறு முதல் ஒன்பது நாள்கள் வரையிலான கப்பல் பயண நேரம் குறையலாம் என்று தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கூறியிருந்தார்.

ஆனால், இது சரக்குகளை இறக்குவதற்கும், நிலவழி இணைப்புப் பாதை வழியாகச் செல்வதற்கும், மற்றொரு முனையில் காத்திருக்கும் கப்பல்களில் ஏற்றுவதற்கும் தேவைப்படும் நேரத்தைப் பொறுத்துள்ளதாகத் திரு சீ குறிப்பிட்டார்.

உலகின் ஆக பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றான சிங்கப்பூர் துறைமுகத்திற்கு, தொடர்ந்து போட்டித்தன்மையுடன் செயல்படுவதும் காலத்திற்கு ஏற்ப இருப்பதுமே முக்கியம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்