‘ஜேபி மோர்கன் சேஸ்’ வங்கிக்கு $2.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவு மேலாளர்களின் தவறான நடத்தைக்காக அந்த அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவு மேலாளர்கள் புரிந்த தவற்றைத் தடுத்து, கண்டுபிடிக்கத் தவறியதற்காக அந்த வங்கிக்கு அபராதம் விதித்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியது.
2018ஆம் ஆண்டு நவம்பருக்கும் 2019ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் இடையே வங்கியின் முகப்புப் பிரிவு கையாண்ட முறி பத்திரப் பரிவர்த்தனைகளில் (bond transactions) வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவு மேலாளர்கள் தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வாடிக்கையாளர்களிடம் தெரிவித்ததாக ஆணையம் கூறியது.
அவ்வாறு செய்ததால் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதங்களுக்கு மேல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
வங்கிகளுக்கு இடையேயான கட்டண விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு இல்லாததால், அவர்கள் வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவு மேலாளர்களின் தகவல்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
நிதிப் பத்திரங்கள் மற்றும் வருநிலை வணிகச் சட்டத்தை மீறியதை ஒப்புக்கொண்ட வங்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் அளவுக்கு அதிகமாகச் செலுத்தப்பட்ட கட்டணங்களைத் திருப்பிக் கொடுத்தது.
இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாணப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைவதாக ‘ஜேபி மோர்கன்’ தனியார் வங்கி கூறியது.

