பொது மருந்தகங்களில் சிறுநீரக நோய்ச் சோதனை

1 mins read
5f17f6c0-b5fc-4823-b10b-c0243f2d4313
தேசியச் சிறுநீரக அறநிறுவனத் தலைவர் ஆர்தர் லாங், நவம்பர் 25ஆம் தேதி, ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும் 60 வயது ஜாப் லோயியிடம் உரையாடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசியச் சிறுநீரக அறநிறுவனம் (NKF), பொது மருந்தகங்களில் ஏற்பாடு செய்யும் நீண்டகாலச் சிறுநீரக நோய்க்கான பரிசோதனை மூலம் 2,000க்கும் மேற்பட்டோர் சோதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளோருக்கு அந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் ஏறக்குறைய 17 விழுக்காட்டினருக்கு சிறுநீரகச் செயல்பாடு வழக்கத்துக்கு மாறாக இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்தப் பரிசோதனைத் திட்டம் தொடங்கியது.

அறநிறுவனம் தற்போது சிங்கப்பூரில் உள்ள 175 பொது மருந்தகங்களில் இந்தச் சோதனையை நடத்துகிறது.

சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் அதிகமுள்ள நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனையும் ‘அல்பமின்’ எனும் புரதத்தைக் கண்டறியும் சிறுநீர்ப் பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனைகளுக்குக் குறைந்தது $25 செலவாகக்கூடும்.

என்கேஎஃப்பில் தற்போது 5,700 நோயாளிகள் ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொள்கின்றனர். சிங்கப்பூரில் உள்ள இத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கையில் இவர்களின் விகிதம் ஏறக்குறைய 60 விழுக்காடு.

தேவை அதிகரிக்கும் சூழலில் கூடுதலான பொது மருந்தகங்களில் ரத்தச் சுத்திகரிப்புச் சேவை வழங்க இலக்கு கொண்டுள்ளதாக அறநிறுவனத்தின் தலைவர் ஆர்தர் லாங் கூறினார்.

சிங்கப்பூரில் ‘சிறுநீரக நோய்ச் சுனாமி’ ஏற்படாமல் தடுக்கும் உத்திகளை அதிகரிப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

2035ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஏறத்தாழ 900,000 பேருக்கு நீண்டகாலச் சிறுநீரக நோய்ப் பாதிப்பு இருக்குமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. இப்போது அத்தகையோரின் எண்ணிக்கை 500,000 என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்