சிங்கப்பூர்ச் சுதந்திரத்தின் அறியப்படாத தகவல்களின் நூல் வெளியீடு

3 mins read
மலேசியாவிடமிருந்து பிரிந்து சிங்கப்பூர் சுதந்திர நாடாக மாறிய வரலாற்றை விவரிக்கும் ‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’
cf2e2512-936e-450e-836b-b3ece03020eb
தேசிய நூலகத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ எனும் நிரந்தரக் கண்காட்சியைப் பார்வையிடும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங். அருகில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: செய்யது இப்ராகிம்
multi-img1 of 2

சுதந்திரத்தை நோக்கிய சிங்கப்பூரின் பாதையைச் செதுக்கிய வரலாற்றுபூர்வ தருணங்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்து ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ (The Albatross File: Singapore’s Independence Declassified) எனும் நிரந்தரக் கண்காட்சியாகவும் ‘ஆல்பட்ராஸ் கோப்பு: பிரிவினை ஏடுகள்’ எனும் தலைப்பில் நூலாகவும் அவை வடிவம் பெற்றுள்ளன.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 60ஆம் ஆண்டு நிறைவின் அங்கமாக இந்த ரகசியத் தகவல்கள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன. நூலை வெளியிட்டு கண்காட்சியைத் தொடங்கிவைத்தார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்.

தேசிய நூலகக் கட்டடத்தின் ‘தி பாட்‘ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுரையாற்றிய திரு லீ, சுதந்திரத்திற்கு முந்தைய நாள்களில் நிலவிய நிச்சயமற்ற சூழலையும் அந்த முடிவுகளுக்க முன் நடந்த சம்பவங்களையும் மாணவனாக, அன்றைய பிரதமரின் மகனாக அறிந்தவற்றை நினைவுகூர்ந்தார்.

‘சிங்கப்பூரின் நலன்களில் சமரசம் செய்துகொள்ளும்படி காலஞ்சென்ற திரு லீ குவான் யூவையும் அவரது குழுவினரையும் ஒருபோதும் மிரட்ட முடியாது என்று சிங்கப்பூரர்கள் நம்பியதால்தான், நம் முன்னோடித் தலைவர்கள் ஆட்சி செய்வதற்கான உரிமையை வென்று வாகை சூடினர்,’’ என்று திரு லீ கூறினார்.

வெளிநாட்டு அல்லது உள்நாட்டுச் சக்தி, அதிகாரம் என எதுவாயினும், அது சிங்கப்பூரின் தேசிய நலன் அல்லது இறையாண்மையில் சமரசம் செய்யவோ அல்லது தேசத்தை அச்சுறுத்தவோ எந்தவொரு சிங்கப்பூர்ப் பிரதமரும் ஒருபோதும் அனுமதித்ததில்லை என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவிடமிருந்து பிரிந்து சுதந்திர நாடாகச் சிங்கப்பூர் மாறியதன் பின்னணி, அதிகாரத்துவ பிரிவினை நிகழ்வதற்கு முன்பு சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இறுதிக்கட்ட உரையாடல்கள், உணர்வுபூர்வ விவாதங்கள் எனப் பல்வேறு விவரங்களைத் திரு லீ பகிர்ந்துகொண்டார்.

குறிப்பாக, 1960களில் சிங்கப்பூர் மலேசியாவுடன் இருப்பதா அல்லது தனியொரு நாடாகச் செயல்படுவதா என்பதன் தொடர்பில் அடுத்தடுத்து அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளிலிருந்து சிங்கப்பூர் கற்றுக்கொண்ட பாடம் குறித்து அவர் பேசினார்.

‘‘தலைவர்கள் எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதை மக்கள் உறுதியாக நம்பும்போதுதான், அரசாங்கத்தின் மீதும், குறிப்பாக அரசியல் தலைமைமீதும் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. மலேசியாவுடன் இருந்த ஈராண்டுகளில் சிங்கப்பூர் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்களில் இதுவும் ஒன்று,’’ என்றார் அவர்.

“சிங்கப்பூர் கற்றுக்கொண்ட மற்றொரு நெடிய பாடம் என்னவெனில், சிங்கப்பூரில் நிலவும்  இன, சமய நல்லிணக்கத்தை ஒருபோதும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான்,’’ என்றும் மூத்த அமைச்சர் லீ குறிப்பிட்டார்.

1963 செப்டம்பரில் மக்கள் செயல் கட்சி மூன்று மலாய் பெரும்பான்மைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றதிலிருந்து 1964 ஜூலை மாதத்தில் சிங்கப்பூர் இனக்கலவரத்தால் சூழப்படும் வரை வெறும் 10 மாதங்களே ஆகியிருந்தன என்று சுட்டிய அவர், அந்தக்  குறுகிய காலத்திற்குள் தீவிரவாதப் போக்குடையோர் மலாய் மற்றும் சீனர்களிடையே ஆழமான அவநம்பிக்கையை விதைப்பதில் வெற்றி பெற்றதாகவும் சொன்னார்.

தொடர்ந்துபேசிய அவர் மலேசியாவுடன் இருந்த ஈராண்டுகள் பற்றிய நினைவுகள் யாவை என்பதற்கு முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ அளித்த பதிலையும் சொன்னார்.

“வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவது எளிது. மக்கள் இனம், மொழி, சமய வேறுபாடுகளால்  உணர்ச்சிவசப்பட நேர்ந்தால் அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்து அல்லது காயப்படுத்தத் தொடங்கினால் அவநம்பிக்கையும் அச்சமும் முழுச் சமூகத்திலும் பரவிவிடும். 

‘‘இத்தனை ஆண்டுகளாக இனங்களை ஒன்றிணைக்கச் செய்த பேரளவிலான பணிகள் குறுகிய காலத்தில் அழிக்கப்படுவதைக் கண்டு விரக்தியுடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தேன்,’’ என்று அமரர் லீ கூறியதை நினைவுகூர்ந்தார் மூத்த அமைச்சர்.

அவ்வகையில், “புதிய வீவக பேட்டைகளைப் பார்க்கும்போது, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் நம்பிக்கையான சூழலும் எளிதில் நொறுங்கக்கூடியவை என்பதை மறந்துவிட நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அது, உடைக்கப்படலாம், சிதைக்கப்படலாம். நியாயமான காரணத்தையும் வகுப்புவாத அரசியல் அல்லது வகுப்புவாத அரசியல் சூழ்ச்சிகளின் செயலாக்கம் மீறிவிடக்கூடும்,” என்றார் அவர்.

இன, சமயம் சார்ந்த அடையாள அரசியல் காரணமாக சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து பிரிந்ததாகக் குறிப்பிட்ட திரு லீ,  இனமோ சமயமோ சிங்கப்பூரை ஒருபோதும் பிளவுபடுத்த அனுமதிக்க முடியாது என்று உறுதிபடக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்