18வது மாடி சன்னல்வழி வெளியேறி துணிகளைக் காயவைத்த பணிப்பெண்

1 mins read
e6f96466-5a4c-43f4-9832-bb61a6b3790b
பணிப்பெண் ஆபத்தான முறையில் நடந்துகொண்டதாகச் சம்பவம் குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் பயனர் குறிப்பிட்டார். - படங்கள்: ஸ்டோம்ப்

சாதாரணமாகத் துணிகளைக் காயப் போடுவதை ஆபத்தான முறையில் பணிப்பெண் ஒருவர் செய்ததைப் பார்த்து ஃபேஸ்புக் பயனர் ஒருவர் அதிர்ந்து போனார்.

சன்னல் வெளியே இருந்த திட்டில் எந்த ஒரு பாதுகாப்புமின்றி அந்தப் பணிப்பெண் நின்று துணிகளைச் சரிசெய்து கொண்டிருந்தார்.

இதைக் காட்டும் இரண்டு படங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொண்ட திருவாட்டி ஸெங், இத்தகைய செயல் பணிப்பெண்களுக்கு வாடிக்கையா? முதலாளி அனுமதிப்பதால் இவ்வாறு செய்வது சரியா? என்று கேள்விகள் எழுப்பி இருந்தார்.

இதே போன்ற வேலைகளைச் செய்யும்போது உயர்மாடியிலிருந்து கீழே விழுந்து மாண்ட பணிப்பெண்களைப் பற்றித் தாம் படித்திருப்பதாகக் கூறினார் அவர்.

எந்த வட்டாரம் என்று குறிப்பிடாமல் 18வது மாடியில் உள்ள வீடு என்று மட்டுமே டிசம்பர் 2ஆம் தேதி அவர் தமது பதிவில் குறிப்பிட்டார்.

இந்தப் பதிவு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. உயிரைப் பணயம் வைக்கும் செயலில் பணிப்பெண் ஈடுபட்டதாக பலரும் சுட்டினர்.

இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யாமல் மனிதவள அமைச்சிடம் புகாரளிக்குமாறு சிலர் திருவாட்டி ஸெங்கிடம் கூறினர்.

இருப்பினும், ஒருசில பணிப்பெண்கள் இத்தகைய முடிவுகளைத் தாங்களே எடுக்கலாம் என்றும் முதலாளிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் ஓர் இணையவாசி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்