சாங்கி விமான நிலையத்தில் அடாவடி; ஆடவருக்குச் சிறை

சாங்கி விமான நிலையத்தில் அடாவடி; ஆடவருக்குச் சிறை

2 mins read
1774bd99-d717-4291-9951-69d2b3267072
அருட்செல்வன் கர்ணன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் அடாவடி செய்த குற்றத்திற்காக 25 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஒருவருக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனையும் 2,800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த அருட்செல்வன் கர்ணன் எனும் அந்த ஆடவர், லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார்.

மறுநாள் காலை, அவர் 700 மில்லிலிட்டர் மதுபானத்தைக் குடித்துவிட்டு போதையில் சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்திற்குச் சென்றார்.

மாலை நேரத்தில் மலேசியா செல்லவிருந்த ஸ்கூட் விமானத்தில் ஏற அவர் திட்டமிட்டிருந்தார்.

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளைக் கடந்து, புறப்பாடு பகுதியான சி17க்கு அவர் சென்றார். அங்கு அருட்செல்வன் மற்ற பயணிகளுக்குத் தொல்லை தரும் விதமாக நடந்துகொண்டார்.

தம்மை அணுகிய ஸ்கூட் ஊழியர்களையும் அருட்செல்வன் இழிவாகப் பேசினார். ஆடவரின் செயலை அடுத்து அவருக்குப் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அருட்செல்வன் அடாவடியில் இறங்கினார்.

ஸ்கூட் ஊழியர் ஒருவரைத் தள்ளிவிட்டு, விமானத்தை இணைக்கும் பாலம் வழியாக விமானத்தை நோக்கிச் சென்றார். இதனால், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கடத்தல் தடுப்பு பொத்தானை அழுத்த நேரிட்டது.

அதனால் விமானத்தின் நுழைவாயிலில் இருந்த கடத்தல் தடுப்பு கதவு மூடப்பட்டது. பின்னர் அருட்செல்வன் கைது செய்யப்பட்டார்.

ஆடவரின் நடவடிக்கையால் விமானம் 53 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

தொல்லை ஏற்படுத்தியது, பொது இடத்தில் குடிபோதையில் இருந்தது, பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தது எனத் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அருட்செல்வன் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்