மரீன் பரேட் கொலை; 23 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு

மரீன் பரேட் கொலை; 23 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
95aad4b8-27ae-46eb-886a-6a19c0f38ac7
கொலைச் சம்பவம் 13ஆவது மாடியில் இருக்கும் மின்தூக்கி உள்ள பகுதியில் நடந்தது. - படம்: ஸ்டாம்ப்
Google News Preferred Icon

மரீன் பரேட் வட்டாரத்தில் உள்ள  கூட்டுரிமை வீட்டில் முதியவர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் கீழே கிடந்தார். இந்நிலையில், முதியவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 23 வயது ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

தம் லப் ஹாங் என்னும் 68 வயது ஆடவரை லகூனா பார்க் கூட்டுரிமை வீட்டில் இயோ சி ஹவ் என்ற இளையர் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

திரு ஹாங்கை 13ஆவது மாடியில் இருக்கும் மின்தூக்கி உள்ள பகுதியில் இயோ தாக்கியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் நவம்பர் 13ஆம் தேதி பிற்பகல் 12.20 மணிக்கும் 12.45 மணிக்கும் இடையில் நடந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. 

இரு ஆடவர்களுக்கும் இடையே உள்ள உறவு குறித்து சரியான தகவல் இல்லை. ஆனால் இருவருக்கும் இடையே பிரச்சினை உள்ளதாகக் கூறப்படுகிறது. 

திரு ஹாங் சிகிச்சைக்காகச் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் அங்கு மாண்டதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இயோ கைது செய்யப்பட்டார்.

கொலை நடந்த இடத்திலிருந்து இரண்டு பேனா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.  

காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்ட இயோ தமக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரினார். இயோவுக்கு மனநலப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இயோமீதான வழக்கு டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இயோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இவ்வாண்டில் மட்டும் இதுவரை ஏழு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
கூட்டுரிமைகொலைமரண தண்டனை