புதிய மருத்துவமனைகள் வேகமாகவும் குறைந்த விலையிலும் கட்டப்படும்: ஓங் யி காங்

2 mins read
9fff057f-abcb-4854-b2a0-3e3562096eed
2024ஆம் ஆண்டு உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பொதுச் சுகாதாரத்துறையின்கீழ் வரும் மருத்துவக் கட்டடங்களின் வடிவமைப்பு ‘சுகாதாரப் பராமரிப்பு வடிவமைப்புத் தரக் கட்டமைப்பு’க்குக் கீழ் இருக்க வேண்டும்.

கட்டமைப்பு விதிமுறைகளைச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) வெளியிட்டார்.

மருத்துவமனை கட்டடங்களுக்கு நிலையான வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் உள்ளதால் புதிய மருத்துவமனைகள் விரைவாகவும் குறைந்த விலையிலும் கட்டமுடியும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.

கட்டமைப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் கட்டடங்கள் கட்டும் பணி எளிமையாக மாறுகிறது என்றார் அவர்.

“சிங்கப்பூரில் கட்டப்படும் மருத்துவமனைகள் எப்போதுமே சிறப்பாக இருக்கும், அது நமது மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கியுள்ளது. இது பெருமைக்குரியது,” என்றார் அமைச்சர் ஓங்.

“மூத்தோர் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது, மருத்துவச் சேவைகளுக்கான தேவையும் கூடுகிறது. அதனால் சிங்கப்பூரில் புதிய மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும், தற்போதுள்ள மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட வேண்டும்,” என்றார் அவர்.

“சிறந்த மருத்துவமனைகளைக் கட்டினால் போதாது. அவை சிறப்பாக, வேகமாக, குறைந்த விலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் கட்டப்படும் மருத்துவமனைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான வடிவமைப்புகள் என்றால் அது நேரத்தை மிச்சப்படுத்தும் கட்டுமான வேலைகளை எளிதாக்கும் என்று திரு ஓங் கூறினார்

“குறைவான நேரத்தில் மருத்துவமனைகளைக் கட்டுவது மட்டும் இலக்கு அல்ல. அதன்மூலம் பல நன்மைகளைப் பெறமுடியும். கட்டுமானத்தை முன்கூட்டியே திட்டமிடமுடியும். அதனால் பல்வேறு விதத்தில் செலவுகள் குறையும். மேலும், கட்டடப் பணிகளின்போது எந்த இடங்களில் பிரச்சினைகள் வரும் என்பதை அறிய முடியும்,” என்றார் அவர்.

விதிமுறைகள் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்குவது பல தரப்புகளுக்கு நன்மை தரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“எல்லா மருத்துவமனைகளிலும் சிகிச்சை அறைகள், நோயாளிகள் தங்குமிடம், அறுவை சிகிச்சை அறைகள் போன்றவை ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருந்தால் சுகாதார ஊழியர்களுக்கு இது பெரிய நன்மையாக இருக்கும். வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஊழியர்கள் செல்லும்போது அவர்கள் குழம்பத் தேவையில்லை,” என்றார் திரு ஓங்.

புதிய கட்டமைப்பின்கீழ் கட்டப்படும் மருத்துவமனையாகத் தெங்கா பொது மற்றும் சமூக மருத்துவமனை உள்ளது. அது ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2030ஆம் ஆண்டு தொடக்கத்தில் அது சேவையாற்றத் தயாராக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.

அதன் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடந்தன. கொவிட்-19 பெருந்தொற்றால் அக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்