சிங்கப்பூரில் வருங்காலத்தில் இஸ்லாமியக் கல்வி பயிலும் இளநிலைப் பட்டதாரிகளுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் (எஸ்யுஎஸ்எஸ்) புதிதாக அமையவிருக்கும் சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்லூரியும் புதிய கூட்டு முயற்சி குறித்துச் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) அறிவித்துள்ளன.
இரு கல்வி நிலையங்களும் இணைந்து புதிய பட்டக்கல்வித் திட்டத்துக்கான பாடப்பகுதிகளை உருவாக்கவிருப்பதாகத் தெரிவித்தன.
இதன் மூலம் சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் சமூக அறிவியல் திட்டங்களில் பங்கெடுக்க இயலும். பட்டம் பெற்ற பிறகு, சமய போதகர் என்ற தகுதியைத் தக்கவைக்கும் அதேவேளையில் ஆலோசனை வழங்குதல், சமூகப் பணி போன்றவற்றிலும் அவை தொடர்பான துறைகளிலும் வாழ்க்கைத்தொழிலை அமைத்துக்கொள்வது அவர்களுக்கு எளிதாகும்.
சென்ற ஆண்டு (2024) புதிய இஸ்லாமியக் கல்லூரி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2028ஆம் ஆண்டு முதல் அது மாணவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கும்.
புதிய ரோச்சோர் வளாகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்வரை தற்காலிக அடிப்படையில், பென்கூலன் ஸ்திரீட்டில் உள்ள சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்ற (முயிஸ்) வளாகத்தில் அக்கல்லூரி செயல்படும். ரோச்சோர் வளாகம் எஸ்யுஎஸ்எஸ் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே அமையவிருக்கிறது.
புதிய கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட நிகழ்ச்சி, எஸ்யுஎஸ்எஸ் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் அதில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இரு கல்வி நிலையங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம், இஸ்லாமியக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம் சமுதாயத்திற்கும் சிங்கப்பூருக்கும் குறிப்பிடத்தக்க படியாகும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இஸ்லாமியக் கல்லூரிப் பட்டதாரிகள் இதன் மூலம் சமகாலச் சவால்களைச் சமாளிக்கும் திறன்களைப் பெற்று சமயம், சமூகம் என இரு துறைகளுக்கும் பங்களிப்பர் என்றார் டாக்டர் ஃபைஷால்.

