டான் கின் லியான் தம்மை சுயேச்சை வேட்பாளர் என்று கூறுவது குறித்துக் கேள்வி எழுப்பும் இங் கொக் சொங்

டான் கின் லியான் தம்மை சுயேச்சை வேட்பாளர் என்று கூறுவது குறித்துக் கேள்வி எழுப்பும் இங் கொக் சொங்

2 mins read
f513a0ad-152f-4f37-9254-2d17a1ecb60f
அதிபர் தேர்தல் வேட்பாளர் இங் கொக் சொங், ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆயர் ராஜா உணவங்காடி நிலையத்தில் கடைக்காரர்களையும் உணவருந்த வந்திருந்தோரையும் சந்தித்துப் பேசினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் கின் லியான் தம்மை கட்சி சார்பற்றவர் என்று கூறிக்கொள்வது குறித்து மற்றொரு வேட்பாளரான இங் கொக் சொங் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டாக்டர் டான் செங் போக், திரு டானை ஆதரிப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து திரு இங் அவ்வாறு கேள்வி எழுப்பினார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆயர் ராஜா வட்டாரத்தில் திரு இங் பிரசாரம் மேற்கொண்டார். டாக்டர் டான் 26 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றிய தொகுதியில் அவ்வட்டாரம் அமைந்துள்ளது.

டாக்டர் டானின் ஆதரவை விமர்சித்த திரு இங், இத்தகைய ‘கூட்டணி’, அதிபர் தேர்தலை பொதுத் தேர்தலாக மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

ஆயர் ராஜா உணவங்காடி நிலையத்தில் திரு இங் செய்தியாளர்களிடம் பேசினார். எதிர்த்தரப்புக் கட்சித் தலைவர்களைச் சார்ந்திருக்கும் திரு டான் எப்படி தம்மை சுயேச்சை வேட்பாளர் என்று கூறிக்கொள்கிறார் என்றார் அவர்.

“எதிர்த்தரப்புக் கட்சித் தலைவர்கள் அவரைக் கட்டுப்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. ஏற்கெனவே அவர்கள், திரு டானை ஆதரிப்போருக்கு அதிபர் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராக நியமனம் வழங்கப்படும் என்ற அளவிற்குப் பேசிவருகிறார்கள்,” என்றார் திரு இங்.

அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’யின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான 75 வயது இங், “இது ஒருவகையில் ஊழலன்றோ? இது எந்த வகையான சுயேச்சைத் தன்மை?” என்று வினவினார்.

டாக்டர் டான், டான் ஜீ சே இருவரும் அதிபர் ஆலோசனை மன்றத்தில் இடம்பெறுவதற்கு மிகச் சிறந்த தகுதியுடையவர்கள் என்று அதிபர் வேட்பாளர் டான், ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

இம்மூவரும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் அதிபர் ஆலோசனை மன்றம் ஆலோசனைகளை வழங்கும். அதில் எட்டுப் பேர் இடம்பெறுவர். மூவரை அதிபரே நியமிக்கலாம். மூவரைப் பிரதமர் நியமிப்பார். தலைமை நீதிபதி ஒருவரையும் பொதுச் சேவை ஆணையத் தலைவர் மற்றொருவரையும் நியமிப்பர்.

தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. ஒருவரை அரசாங்கம் ஆதரிக்கிறது. ஆக, தாம் மட்டுமே கட்சி சார்பற்ற வேட்பாளர் என்றார் திரு இங்.

கட்சி சார்பற்ற ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஆயர் ராஜா உணவங்காடி நிலையக் கடைக்காரர்களையும் உணவருந்த வந்திருந்தோரையும் சந்தித்துப் பேசினார்.

பிற்பகலில் அவர், லவ் பா சாட் உணவங்காடி நிலையத்தில் பிரசாரத்தைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்