பங்குனி உத்திரத் திருவிழாவில் திரளாக பங்குகொண்ட பக்தர்கள்

நான்கு தலைமுறைகளாக புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலுக்குக் காவடி எடுத்துவருகின்றனர் திரு சீனிவாசன் சிங்காரவேலு குடும்பத்தினர். 22 வயதாகும் இவர் நான்காவது தலைமுறையை பிரதிநிதித்து முதல் முறையாக இவ்வாண்டு காவடி தூக்கினார். 

தற்சமயம் தேசிய சேவை புரிந்து வரும் இவர் 108 அலகு குத்திக்கொண்டு தன் குடும்பத்தின் காவடியைச் சுமந்தார். 30 கிலோ எடையுள்ள காவடியை சுமப்பது ஆரம்பத்தில் ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும் குடும்பத்தின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் வாய்ப்பு தனக்குக் கிட்டியுள்ளதை நற்பேறாகக் கருதுவதாக அவர் கூறினார். 

1951ஆம் ஆண்டு முதன்முறையாக அவருடைய கொள்ளுத் தாத்தா திரு நடேசன் சிங்காரம் பிள்ளை காவடி தூக்கியதைத் தொடர்ந்து, இவருடைய தாத்தா 71 வயது திரு சிங்காரம் பத்பநாபன் காவடி தூக்கினார். அதன் பிறகு இவருடைய தந்தை 49 வயது திரு சிங்காரவேலன் பத்பநாபன் குடும்ப மரபைத் தொடர்ந்தார். 

கடந்த 28 ஆண்டுகளாக காவடி எடுத்துவரும் 40 வயதான திரு சரவணன் ஆறுமுகம் தன்னுடைய தாயின் வேண்டுதல் ஈடேறியதன் நன்றிக்கடனாக ஒவ்வோர் ஆண்டும் இதனைச் செய்து வருவதாக கூறினார். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி மேற்பார்வையாளராக பணிபுரியும் அவருக்கு பிறந்தது முதலே ஆஸ்துமா நோய் இருந்து வந்தது

தன்னுடைய தாயாரின் தொடர் வேண்டுதலின் பயனாக 12 வயதில் அந்நோய் குணமானதையடுத்து, தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் காவடி எடுத்து வருகிறார் திரு சரவணன். மயில்காவடி எடுத்த அவர், கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் இவ்வாண்டு காவடி எடுத்தது மனத்திலுள்ள சுமையை இறக்கி வைத்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். 

சில ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்ட மூட்டுவலியிலும் 30 கிலோ எடையுள்ள காவடியை ச்சுமந்து தன்னுடைய காணிக்கையைச் செலுத்தினார் 56 வயது திரு பரமசிவம் ராமசாமி. சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தில் காப்பாளராக பணிபுரியும் அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 

மொத்தம் இதுவரை 19 ஆண்டுகள் காவடி எடுத்துள்ள அவர், தன் தாத்தாவிடமிருந்து வந்த மரபாக காவடி எடுக்கும் பழக்கத்தை கருதுகிறார். 48 நாள்கள் விரதம் இருந்து கால் வலியையும் பொருட்படுத்தாமல் நல்லமுறையில் காவடி எடுத்தது நற்சிந்தனையைத் தூண்டுவதாக உணர்கிறார் அவர். 

அட்மிரல்டி சமூக மன்றத்தை (ACE) சார்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கடந்த 15 ஆண்டுகளாக இத்திருவிழாவில் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர். ஒன்பது ஆண்டுகள் தண்ணீர்ப் பந்தல், மூன்றாண்டுகள் பால்குடம், மூன்றாண்டுகள் இடும்பன் காவடி எனக் குழுவாக அவர்கள் பங்குகொள்கின்றனர். 

இதுகுறித்து அக்குழுவின் தலைவரான 45 வயது ஸ்டீவ் சரவணன், “எங்களுக்குள் உள்ள அன்பையும் பக்தியையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக இதனைக் கருதுகிறோம். குழுவுடன் இணைந்து செய்வதே மிகுந்த மகிழ்ச்சி. இதுமட்டுமல்லாமல் மாதம்ந்தோறும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு செய்து 50 முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் முயற்சியையும் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்து வருகிறோம்“ என்று கூறினார். 

தன்னுடைய ஏழு மாத குழந்தையான ஆரியன் விக்ரமிற்கு முதல்முறையாக முடியிறக்கினார் 38 வயதான திரு விக்ரம் சண்முகம். சுயதொழில் செய்யும் அவர், இளம் வயது முதலே தனக்கும் இக்கோயிலுக்கும் நெருங்கிய பிணைப்பு இருந்து வருவதாகக் கூறினார். 

இளம் வயதில் தனக்கு ஆஸ்துமா நோய் இருந்ததாகவும் இக்கோயிலில் அப்போது நடைபெற்ற யோகாசனப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி செய்து நாளடைவில் அந்நோயிலிருந்து மீண்டு வந்ததால் முருகக் கடவுளுக்கு என்றென்றும் தான் நன்றியுடன் இருப்பதாகவும் சொன்னார் திரு விக்ரம்.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!