இந்த வார தொடக்கத்தில் சிங்கப்பூர் நீரிணையில் இரண்டு கடற்கொள்ளை தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. ஆனால் கிறிஸ்மஸ் தினத்தன்று அங்கு கடற்கொள்ளைச் சம்பவம் மீண்டும் ஒன்று நடப்பதாக இருந்தது.
இந்த சம்பவத்தைச் சேர்த்து, இவ்வாண்டு அங்கு 30 கடற்கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியியுள்ளன.
கடற்கொள்ளையையும் ஆயுதம் தாங்கிய கொள்ளையையும் எதிர்த்துப் போரிடுதல் குறித்த வட்டார ஒத்துழைப்பு உடன்பாடு (ReCAAP) தகவல் நிலையம் இதை வெளியிட்டது.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12.28 மணிக்கு, சிங்கப்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘ஸ்தேனா இம்மோர்ட்டல்’ எனும் கப்பலில் ஆறு கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கப்பலின் தலைமைப் பொறியாளர் கொள்ளையர்களைப் பார்த்தவுடன் உடனே கப்பலின் தலைமை மாலுமியிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கப்பலின் எச்சரிப்பு முறை செயல்படுத்தப்பட்டது.
அந்த கொள்ளையர்கள் சிறிய படலில் எதையும் திருடாமல் தப்பிச் சென்றனர்.
ReCAAP தகவல் நிலையம் கொடுத்த தகவல்படி, கடற்கொள்ளையர்களுக்கும் கப்பல் பணிக்குழுவினர்களுக்கும் இடையே எவ்வித மோதலும் நடக்கவில்லை.
ReCAAP தகவல் நிலையம் வெளியிட்ட அறிக்கையில், சிங்கப்பூர் நீரிணையில் அதிகரித்து வரும் கடற்கொள்ளை முயற்சிகள் குறித்து அது அக்கறை கொள்வதாகவும் கொள்ளையர்கள் கைதாகாத பட்சத்தில் இதுபோன்ற சம்பவங்கள் சிங்கப்பூர் நீரிணையில் நீடிக்கக்கூடும் என்றும் எச்சரித்தது.
இது போன்ற சம்பவங்களில் துரிதமாக செயல்பட கடலோர மாநில சட்ட செயலாக்க அமைப்புகள் தங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தி கண்காணிப்பை அதிகரிக்குமாறு ReCAAP தகவல் நிலையம் அறிவுறுத்துகிறது.