சிமுக வேட்பாளர்கள்: புத்தாக்கத்தை மாற்று வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்

வெளிநாட்டுத் திறனாளர்களுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றாலும் தற்போதைய குடிநுழைவுக் கொள்கையால் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர வர்த்தகங்களும் சிங்கப்பூரர்களின் வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை (சிமுக) சேர்ந்த திரு லோகநாதன் நடராஜா தெரிவித்திருக்கிறார்.

தடையற்ற வர்த்தகங்களின் மூலம் வரவழைக்கப்படும் வெளிநாட்டுத் திறனாளர்களால் பெரும்பாலான நேரங்களில் பயனடைவது ‘ஜிஎல்சி’ எனப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய பெருநிறுவனங்களே என அவர் குறைகூறியுள்ளார்.

“மருத்துவ இயந்திரங்கள் உள்ளிட்ட ஒரு சில கருவிகளை சிங்கப்பூரில் இயக்குவதற்காக அதற்கான நிபுணத்துவம் கொண்டுள்ள வெளிநாட்டினர் இத்தகைய ஒப்பந்தங்களின் வாயிலாக சிங்கப்பூருக்கு வரவழைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

“சிங்கப்பூரில் வெளிநாட்டுத் திறனாளர்கள் நிச்சயம் தேவை என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் இந்த ஏற்பாட்டினால் அரசாங்கம் தொடர்புடைய பெருநிறுவனங்களே பயனடைகின்றன. என்னைப் பொறுத்தவரை குறைந்த சம்பளத்தில் இவர்களை வேலைக்கு எடுக்கும் ஜிஎல்சி நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் சிறிய நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன,” என்று சிங்கப்பூர் ஆயுதப்படையில் லெஃப்டினெண்ட் கர்னலாகச் சேவையாற்றி ஓய்வுபெற்ற திரு லோகநாதன், 57, நேற்று கூறினார்.

இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் கால்பதிக்க சிங்கப்பூரின் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவது இத்தகைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் என்பதை அமைச்சர் ஈஸ்வரன் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.

ஆயினும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் சிறிய நடுத்தர வர்த்தகங்கள் எப்படி பயனடைந்தன என்பதற்கு அரசாங்க தரப்பில் போதிய தகவல்கள் கொடுக்கப்படவில்லை என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடும் திரு லோகநாதன் நேற்று தமிழ் முரசிடம் கூறினார்.

“வெளிநாட்டினர் தேவை என்றாலும் சிங்கப்பூரில் அளவுக்கு அதிகமான வேலைகளில் அவர்கள் இருப்பது சரியல்ல. திறனாளர்களை இங்கேயே உருவாக்க முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

திறனாளர்களை உருவாக்க முற்படும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் ஓர் அற்புதமானத் திட்டம் என்று பாராட்டிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளரான 52 வயது கலா மாணிக்கம், அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் திருப்தி கரமாக இல்லை என்று கூறினார்.

“திறன்மேம்பாடுகளை வேலைச் சூழலிலும் வேலை நேரத்திலும் செய்தால்தான் புத்தாக்கம் மேம்படும். கைத்தொழிலை வகுப்பறைச் சூழலில் கற்றுக்கொள்ள முடியாது. திறன்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிடும் பல்வேறு சான்றிதழ்களை வாங்கினாலும் அவை வேலை இடங்களுக்குப் பயன்படவில்லை,” என்று பெரியவர்களுக்கான கல்வி பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றும் திருவாட்டி கலா கூறினார்.

“1970களில் அறிமுகம் செய்யப்பட்ட ‘விஐடிபி’ முறை ‘ஐடிஇ’ முறைக்கு மாற்றப்பட்டபோது திறன் மேம்பாடு வேலையிடச் சூழலிலிருந்து பள்ளிச் சூழலுக்கு மாறியது. ஆனால் வேலைக்கான திறன்களை வேலைச் சூழலில்தான் வளர்க்கவேண்டும். இப்படி புத்தாக்கத்தைத் துரிதப்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்துவதே எங்களது திட்டம்,” என்று நீ சூன் குழுத்தொகுதி யில் போட்டியிடும் அவர் கூறினார்.

தொடர்ந்து அதிகரித்துவரும் சுகாதாரச் செலவைச் சமாளிக்கவே பொருள் சேவை வரி உயர்த்தப்பட்டது என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் நிதியமைச்சருமான இந்திராணி ராஜா கூறியது தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று சிமுகவைச் சேர்ந்த மற்றொரு நீ சூன் குழுத் தொகுதி வேட்பாளர் ஸ்ரீ நல்லக்கருப்பன், 56, தெரிவித்தார்.

வரிகளின் மூலமாக ஈட்டப்படும் வருவாய்க்கும் நிதியிருப்புகளின் முதலீடு மூலம் பெறப்படும் வருவாய்க்கும் இடையே சமநிலை இருந்தால் மக்களுக்கு நல்லது என்று முதலீட்டு நிபுணரான அவர் குறிப்பிட்டார்.

ஜுவல் சாங்கி போன்ற பிரம்மாண்ட சுற்றுப்பயணத் திட்டங்களுக்கான செலவு தற்போதைய கொவிட்-19 கிருமிப்பரவல் சூழலில் விரையச் செலவு ஆகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!