பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனையில் புதன்கிழமை (டிசம்பர் 11) காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முக்கியக் கருவிகள் காப்பு மின்னமைப்பு (backup) மூலம் இயக்கப்பட்டன.
321 ஜூ சியாட் பிளேஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள அம்மருத்துவமனையில் காலை மணி 9.10 முதல் 10.20 வரை மின்தடை நீடித்தது.
அந்தக் குறுகிய நேர மின்தடை காரணமாக, தொடங்குவதற்கு முன்னரே ஓர் அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டதாக பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி ஐவன் கோர் தெரிவித்தார்.
காப்பு மின்னமைப்பு மூலம் இன்னோர் அறுவை சிகிச்சை தடையின்றி நடந்தேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிய தம் குழுவினர் மின்சேவை ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினர் என்றும் காலை 10.20 மணிக்கு அனைத்துச் சேவைகளும் வழக்கநிலைக்குத் திரும்பின என்றும் திரு கோர் கூறினார்.
மின்தடையால் நோயாளிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு அவர் மன்னிப்பு கோரினார்.
மின்தடையால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டன, எத்தனை நோயாளிகள் பாதிக்கப்பட்டனர் என்பன போன்ற விவரங்களை மருத்துவமனை தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அம்மருத்துவமனையில் தம் குழந்தைக்குச் சிகிச்சை பெற்றுவரும் ஒருவர் கூறுகையில், அவசரப் பராமரிப்பு நிலையங்கள், உள்நோயாளி சிகிச்சைப் பிரிவுகள் உட்பட கட்டடம் முழுவதும் மின்விளக்குகள் எரியவில்லை என்று சொன்னார்.

