வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் மனநிறைவு குறைந்துள்ளது.
தூய்மை, இரைச்சல், தனியுரிமை உள்ளிட்ட அம்சங்களில் அவர்கள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில் 17ல் 13 அம்சங்களில் மனநிறைவு குறைந்துள்ளது.
நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட மாதிரி வீடமைப்பு ஆய்வின் முடிவுகளில் இது தெரியவந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அண்மைய ஆய்வுக்காக, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அனைத்து வீவக நகரங்களிலும் குடியிருப்புப் பேட்டைகளிலும் உள்ள சுமார் 7,000 குடும்பங்களிடமும் 600க்கும் மேற்பட்ட ஒற்றைக் குடியிருப்பாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது 17ல் 13 அம்சங்களில் வசிப்போரிடம் மனநிறைவு குறைந்திருப்பது தெரிந்தது.
வீவக குடியிருப்புப் பகுதிகளில் 20 வாழ்விடச் சூழல் அம்சங்கள் பற்றி ஆய்வில் ஆராயப்பட்டது.
இதில் தூய்மை, இரைச்சல் ஆகியவை குறைந்த மனநிறைவளிக்கும் அம்சங்களாகக் கண்டறியப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் 2018ஆம் ஆண்டின் 75.7 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் அண்மைய ஆய்வில் இரைச்சல் தொடர்பான அதிருப்தி 74 விழுக்காட்டுக்குக் குறைந்தது. தூய்மை தொடர்பானவற்றில் அது 77.4 விழுக்காட்டிலிருந்து 76.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
அண்டை வீட்டாரால் ஏற்படும் இடையூறுகள் அல்லது போக்குவரத்து போன்ற வெளிப்புறச் சூழலில் இருந்து வரும் இரைச்சல் போன்றவை சத்த அளவுகள் குறித்த மனக்குறைக்கு முக்கியக் காரணங்கள் என்று வீவக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒழுங்கற்ற தூய்மைப் பணி, கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவது, பொது இடங்களில் பொருள்களைக் குவித்து வைப்பது போன்றவை தூய்மை தொடர்பான குடியிருப்பாளர்களின் மனக்குறைகளாகும்.
இதற்கிடையே நான்கு அம்சங்களில் குடியிருப்பாளர்களின் மனநிறைவு அதிகமாக இருந்தது.
போக்குவரத்துப் பாதுகாப்பு, சுற்றுப்புறப் பாதுகாப்பு நடவடிக்கைகள், கார் நிறுத்துமிட வசதி உள்ளிட்ட அம்சங்களில் குடியிருப்பாளர்களுக்கு மனநிறைவு கூடியிருந்தது. அதே நேரத்தில் வீட்டு விலை, வாடகை வீட்டு விகிதம் ஆகியவற்றில் 7.4 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்து 88.9 விழுக்காடாக இருந்தது. வீட்டின் அளவு குறைந்திருப்பது, வீட்டிலிருந்து பார்க்கும் காட்சி உள்ளிட்ட அம்சங்களிலும் மனநிறைவு குறைந்தது.

