உயர்நிலை முதல் வகுப்பில் சேரவிருக்கும் மாணவர்கள் தங்களுக்கு எந்த உயர்நிலைப்பள்ளியில் இடம் கிடைத்துள்ளது என்பதை டிசம்பர் 18ஆம் தேதி காலை 9.00 மணி முதல் தெரிந்துகொள்ளலாம். குறுஞ்செய்தி, S1 இணையத் தளம், மாணவரின் தொடக்கப்பள்ளி ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று கல்வி அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 11) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
https://www.moe.gov.sg/s1-posting என்ற இணையத்தளத்தில் மாணவர் பிறப்புச் சான்றிதழ் எண் அல்லது FIN (வெளிநாட்டு அடையாள எண்), S1 பின் ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவுகளைக் காணலாம்.
மாணவர்கள் உடனடியாக புதிய பள்ளியில் பதியத் தேவையில்லை. மேல்விவரங்கள் தேவைப்பட்டால், பள்ளியின் இணையத்தளத்தை நாடலாம்.
‘Parents Gateway’ என்ற இணையத் தளத்தில் உள்ள பெற்றோருக்கும் டிசம்பர் 18 பிற்பகல் முதல் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து அறிவுறுத்தல்களைப் பெறுவார்கள்.
ஜனவரி 2ஆம் தேதி பள்ளிக்குச் செல்ல இயலாத மாணவர்கள் தகுந்த காரணங்களைத் தங்கள் புதிய பள்ளிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி அவர்களுக்கு ஓர் இடத்தை உறுதிப்படுத்தும் என்று அமைச்சு தெரிவித்தது.
2024 ஆம் ஆண்டில் மொத்தம் 40,894 தொடக்கநிலை 6 மாணவர்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை எழுதினர். முடிவுகள் நவம்பர் 20 அன்று வெளியிடப்பட்டன. உயர்நிலைப் பள்ளிக்கு 98.5 விழுக்காட்டு மாணவர்கள் தகுதி பெற்றனர்.

