செப்டம்பர் பள்ளி விடுமுறை: நிலவழிச் சோதனைச்சாவடிகளில் நெரிசல் ஏற்படலாம்

செப்டம்பர் பள்ளி விடுமுறை: நிலவழிச் சோதனைச்சாவடிகளில் நெரிசல் ஏற்படலாம்

1 mins read
70fc379d-1f6f-4059-acd5-19747d7c118b
செப்டம்பர் பள்ளி விடுமுறை நாள்களில் குடிநுழைவு சோதனையைக் கடக்கப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் எனக் குடி­நு­ழைவு, சோத­னைச்சாவ­டி ஆணை­யம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செப்டம்பரில் பள்ளி விடுமுறைக் காலத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளில் மலேசியா செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளக்கூடும் எனக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாள்களில் மலேசியா செல்வோர், கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதுதொடர்பாக ஆணையம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிக்கையில், வாகனவோட்டிகள் அதிகாலை அல்லது பின்னிரவு போன்ற நெரிசலற்ற நேரங்களில் பயணம் செய்யுமாறும் ‘ஒன்மோட்டரிங்’ இணையத்தளத்தின் நேரலைக் கண்காணிப்புக் கருவி வழியே போக்குவரத்து நிலவரத்தை அறியுமாறும் கேட்டுக்கொண்டது.

மேலும், பயணிகள் விரைவாக எல்லையைக் கடக்க ‘மைஐசிஏ’ செயலியில் உருவாக்கப்படும் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துமாறு ஆணையம் தெரிவித்தது.

துவாசில் புதிய தானியக்க எல்லைச் சோதனை முறைப் பணிகளால் சில வாகனப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேசிய தின வார இறுதியில் 2.1 மில்லியனுக்கும் அதிகமானோர் எல்லையைக் கடந்த வேளையில், வாகனவோட்டிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்க நேரிட்டது.

குறிப்புச் சொற்கள்