சான் ஃபிரான்சிஸ்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட எஸ்ஐஏ விமானம்

சான் ஃபிரான்சிஸ்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட எஸ்ஐஏ விமானம்

சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த அவ்விமானம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஒழுங்கின்றி நடந்துகொண்ட பயணி காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2026 - 10:06 am

1 mins read

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் புறப்பட்டு சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் சான் ஃபிரான்சிஸ்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

எஸ்கியூ31 விமானத்தில் இருந்த பயணி ஒருவர் ஒழுங்கின்றி நடந்துகொண்டதாகவும் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டதாகவும் எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் வியாழக்கிழமை (அக்டோபர் 15) ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அந்தப் பயணியின் நடத்தை குறித்த விவரங்கள் பகிரப்படவில்லை.

“விமானிகள் நிலைமையை ஆராய்ந்து விமானத்தை சான் ஃபிரான்சிஸ்கோவுக்குத் திருப்பிவிட முடிவெடுத்தனர்,” என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். விமானம் தரையிறங்கிய பிறகு சம்பந்தப்பட்ட பயணி, உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எஸ்கியூ31 விமானம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (அக்டோபர் 14) காலை 11.51 மணிக்கு சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது. அது, சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சாங்கி விமான நிலையத்தின் நேரடித் தகவல் கண்காணிப்பு இணையத்தளத்தில் இத்தகவல் இடம்பெற்றது.

விமானம் புறப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரத்துக்குப் பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 8.40 மணிக்கு அவ்விமானம் மீண்டும் சான் ஃபிரான்சிஸ்கோ அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்ததாக எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார். இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எஸ்ஐஏ இணைந்து பணியாற்றிவருவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்எஸ்ஐஏவிமானம்அமெரிக்காபயணி