ஆங்கிலத் தேர்ச்சி: முதல் மூன்று நாடுகளில் சிங்கப்பூர்

ஆங்கிலத் தேர்ச்சி: முதல் மூன்று நாடுகளில் சிங்கப்பூர்

2 mins read
613d2a3c-9a15-43aa-916a-86f613f6407a
ஆங்கிலத் தேர்ச்சியைப் பொறுத்தவரை நெதர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரியா முதல் மூன்று இடங்களில் வந்தன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மக்களின் வாழ்வில் ஆங்கில மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. என்றாலும், அம்மொழிக் கற்றல் உலகளவிலும் வட்டார அளவிலும்கூட வேறுபடுகிறது.

ஆங்கில மொழி பேசப்படும் நாடுகளில் வசிக்கும் மக்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இது தெரிய வருகிறது.

அந்நிய மொழிக் கற்றலில் தனித்துவம் பெற்ற நிறுவனமான ‘எடுகேஷன் ஃபர்ஸ்ட்’ (இஎஃப்), 113 நாடுகளில் வசிக்கும் 2.2 மில்லியன் பேரை ஆங்கிலத் தேர்வு ஒன்றை எடுக்க வைத்தது. பங்கேற்பாளர்களின் சராசரி வயது 28. அவர்களில் 55 விழுக்காட்டினர் பெண்கள்.

பன்னிரண்டு நாடுகள் அதிக மதிப்பெண்களைப் பெற்றன. அதிக தேர்ச்சிபெற்ற பிரிவில் அவை வைக்கப்பட்டன. நெதர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரியா முதல் மூன்று இடங்களில் வந்தன.

இஎஃப் தரவரிசைப் பட்டியலில் மேலிடம் பிடித்த நாடுகளில் பெரும்பாலானவை ஐரோப்பாவைச் சேர்ந்தவை. சிங்கப்பூரும் தென்னாப்பிரிக்காவும் (ஒன்பதாவது இடம்) மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இவ்விரு நாடுகளும் முன்னர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்ததால் இது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.

இஎஃப் ஆய்வைப் பொறுத்தமட்டில், ஆங்கிலத்தில் நன்கு பேசுவது, எழுதுவது, புரிந்துகொள்வதில் ஐரோப்பா சிறந்து விளங்குகிறது. என்றாலும், நாடுகளுக்கு இடையே இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு நிலவுகிறது.

எடுத்துக்காட்டாக, தரவரிசையில் பெல்ஜியம் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆனால் ஸ்பெயினும் இத்தாலியும் கூட்டாக 35வது இடத்தில் வந்தன. பிரான்சும் கரீபிய நாடான கியூபாவும் 43வது இடத்தில் உள்ளன.

எது எப்படி இருந்தாலும், இந்தக் காலத்தில் ஆங்கிலப் புலமை எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இஎஃப் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஆங்கிலம்சிங்கப்பூர்தரவரிசைஆய்வு