தொப்புள் கொடி ரத்த சேமிப்பு: கொடையாளர் பற்றாக்குறை

2 mins read
a1a8c296-dcee-41f5-9d3e-057d96d5c6d6
சிங்கப்பூரின் தொப்புள் கொடி ரத்த சேமிப்பு வங்கி (எஸ்சிபிபி). - கோப்புப் படம்

சிங்கப்பூரின் தொப்புள் கொடி ரத்த சேமிப்பு வங்கி (எஸ்சிபிபி) தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளபோதும்  நன்கொடையாளர் பற்றாக்குறையும் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.

மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வுகள் ஆகியவற்றில் தொப்புள் கொடி ரத்த சேமிப்பின் பயன்பாடு  கூடியுள்ள வேளையில் இந்நிலைமையை அந்தச் சேமிப்பு வங்கி எதிர்கொள்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இந்தத் தொப்புள் கொடி ரத்த சேமிப்பு வங்கி அதன் கொடையாளர்களிடமிருந்து சுமார் 75,000 யூனிட் (மாதிரிகளை) சேகரித்துள்ளது. 

எனினும், அண்மைய ஆண்டுகளில் தொப்புள் கொடி ரத்த சேமிப்பின்  நன்மைகள் பற்றி அதிகப்படியான மக்கள் அறிந்திருந்தாலும் பன்முக சேகரிப்பை உருவாக்கப் போதுமான நன்கொடையாளர்களைக் பெற்றிட வங்கி சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நோய்களுக்குச் சிகிக்சையளிக்கக்கூடியதும், குறிப்பாக விரைவாகப் புதுப்பித்துக் கொள்ளக்கூடியதுமான குருத்தணுக்கள் என்று சொல்லப்படும் ‘ப்ளட் ஸ்டெம் செல்ஸ்’ தொப்புள் கொடி ரத்தத்தில் உள்ளதால், மருத்துவ உலகில் இதற்கான தேவை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கருத்துரைத்த மருத்துவ இயக்குநர், அலோய்ஷியஸ் ஹோ, “தற்போது பெற்றோர்கள் இதுகுறித்த அதிகளவிலான தகவல்களைப் அறிந்துள்ளனர். எனவே தொப்புள் கொடி ரத்தத்தை சேமிக்கும் விதம், அதன் பாதுகாப்பு அதில் உள்ள இதர கூறுகள் குறித்த இன்னும் விரிவான கேள்விகளைக் கேட்கின்றனர்,” என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய இணைப் பேராசிரியர் ஹோ, ‘குழந்தை போனஸ் திட்டம்’ குடும்பங்கள் வங்கியை அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. மேலும், சிங்கப்பூர் பெற்றோருக்கு நடைமுறைக்கு ஏற்ற  நிதி தெரிவிற்கான வாய்ப்பையும் அது வழங்குகிறது’ என்றும் சொன்னார்.

வங்கியில் 15,000 யூனிட் (மாதிரி) இருப்பில் இருந்தும் சில சூழல்களில் பொருத்தமான தொப்புள் கொடி ரத்த சேமிப்பு கிடைக்காமல் போக நேரிடுவதைச் சுட்டிய திரு ஹோ, அப்பொழுது வெளிநாட்டு ரத்த வங்கிகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் பல்லின மக்கள் இருப்பதை அறிந்திருக்கிறோம். எனவே  அனைத்துத்  தரப்பினரும்  இத்தகைய நன்கொடை அளிப்பதற்கு முன்வந்தால் தொப்புள் கொடி ரத்தத்தின் கையிருப்பை அதிகரிக்க முடியும். மேலும் இத்தகைய தானங்களைப் பெற காத்திருப்போருக்கு அதன்வழி உதவிடவும் முடியும்,” என்றும் திரு ஹோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்