சமய நடவடிக்கைகளுடன் சமூக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில்

2 mins read
928319be-21ae-43a3-a465-5bc011866d84
2024ஆம் ஆண்டு மெதுநடை ஓட்ட நிகழ்ச்சியில் மூத்தோருக்கு இலவச சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை பங்கேற்றார். - படம்: செட்டியார் கோவில் குழுமம்

கடந்த 1925ஆம் ஆண்டு முதல் குடமுழுக்கு நடைபெற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்ட கியோங் செய்க் சாலை ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் 100வது ஆண்டை எட்டியுள்ளது.

“ சிங்கப்பூரின் பல்லின சமூக ஒற்றுமைக்குச் சான்றாக இக்கோவில் விளங்குகிறது,” என்று கூறிய அக்கோவிலின் நிர்வாகக் குழு, இந்நூற்றாண்டைத் தொடர்ந்து எதிர்வரும் ஆண்டுகளிலும் சிறப்பாகச் செயல்பட ஏதுவாக மூன்று உறுதிமொழிகளை ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னோர்களின் அடையாளமாக விளங்கும் பாரம்பரியக் கூறுகளை அதே பேரார்வத்துடன் பேணிப் பாதுகாத்தல், அனைவரையும் உள்ளடக்கும் தன்மைமூலம் சமூகத்தை வலுப்படுத்தவும், பக்தி உள்ளிட்ட மரபுக் கூறுகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுள்ளதாகக் கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

“செட்டியார் கோவில் சங்கத்தின் கீழ் செயல்படும் இக்கோவில் வழிபாடுகள், திருவிழாக்கள் உள்ளிட்ட சமயம் சார் நடவடிக்கைகள் மட்டுமின்றி சமூக நடவடிக்கைகளிலும் பெரும்பங்காற்றி வருகிறது,” என்று கூறினார் அக்கோவிலின் தலைவர் சுப்பிரமணியம் காசி, 68.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம். - படம்: செட்டியார் கோவில் குழுமம்

மாணவர்கள், வசதி குறைந்தோர், மூத்தோர் எனச் சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு ஆண்டுதோறும் நிதியுதவியும் பொருளுதவியும் நன்கொடையாக வழங்கப்பட்டு வருவதை அவர் சுட்டினார்.

கல்வி உதவி நிதி, உபகாரச் சம்பளம், நடமாடும் மருந்தகம், உடற்குறையுள்ளோர்க்கு இலவச சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப்படுவதாகக் கூறினார் திரு காசி.

கடந்த பத்தாண்டுகளாக வசதி குறைந்த தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கல்வியில் உன்னதத் தேர்ச்சி பெற்ற தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கோவில் சங்கத்தின் சார்பில் உதவிநிதி வழங்கப்படுகிறது.

சமூகத்தினரிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 25 ஆண்டுகளாக மெதுநடை ஓட்ட நிகழ்ச்சியையும் அந்நிர்வாகக் குழு ஏற்பாடு செய்து வருகிறது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி உதவி நிதி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கா சண்முகம் பங்கேற்றார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி உதவி நிதி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கா சண்முகம் பங்கேற்றார். - படம்: செட்டியார் கோவில் குழுமம்

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மூத்தோருடன் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம், கடந்த எட்டாண்டுகளாகப் பின்தங்கிய குடும்பங்களுடன் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி, எனப் பல சமூகத்தினரின் பண்டிகைகளையும் தங்கள் கோவில்கள் ஏற்பாடு செய்து வருவதாகக் கோவிலின் செயலாளர் அழகப்பன் அண்ணாமலை கூறினார்.

ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை தனியாக வசிக்கும் மூத்தோரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வீடுகளுக்கே சென்று மதிய உணவளிக்கும் ‘ஃபூட் ஃபார் லைஃப்’ எனும் திட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த இஃப்தார் விருந்து. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா.
2025 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த இஃப்தார் விருந்து. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா. - படம்: செட்டியார் கோவில் குழுமம்

“கோவில்கள் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமில்லாமல், சமூக ஒன்றுகூடலுக்கான இடமாகவும் இயன்றவரை சமூகப் பணி மேற்கொள்ள வழிவகுக்கும் பாலமாகவும் அமைவது பெருமைக்குரியது,” என்றார் அண்ணாமலை.

மேலும், வாரயிறுதிகளில் மாணவர்களுக்குத் திருமுறை வகுப்புகளும் இலவசமாக நடத்தப்படுவதாக நிர்வாகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்