மீண்டும் கூட்டணி மையமானது பியுபி

சிங்கப்பூரின் தேசிய நீர் முகவையான பியுபி பாதுகாப்பான குடிநீர் நிர்வாகம், ஒருங்கிணைந்த நகர நீர் நிர்வாகம் ஆகியவற்றுக் கான உலகச் சுகாதார அமைப்பின் கூட்டணி மையமாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. நீர், சுகாதாரம் ஆகியவற்றுக்கு உலகில் உள்ள உலக சுகாதார அமைப்பின் 15 கூட்டணி மையங் களில் பியுபி ஒன்றாக உள்ளது. மேலும் மேற்கு பசிபிக் வட்டாரத்தில் உள்ள இரு இத்தகைய மையங்களில் சிங்கப்பூரின் பியுபியும் ஒன்றாகத் திகழ்கிறது.

ஏற்கெனவே கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டு வரை உலக சுகாதார அமைப்பின் கூட்டணி மையமாக பொறுப்பு வகித்த பியுபி, குடிநீர், நீர் பாதுகாப்பு திறன் வளர்ப்பு ஆகியவற்றில் எழுந்த பிரச்சினை களைச் சமாளிக்கப் பங்காற்றியது. குடிநீர் தரம் சிறிய சமூகத்திற் கான நீர் பாதுகாப்பு, நீர் வளங்கள், நீர் விநியோகப் பாதுகாப்பு ஆகியவற்றில் வழிகாட்டி கையேடு களைத் தயாரிக்கவும் பியுபி உதவியது. மீண்டும் உலக சுகாதார அமைப்பின் கூட்டணி மையமாக நியமிக்கப்பட்ட பியுபி தொடர்ந்து நான்கு ஆண்டு களுக்கு அப்பொறுப்பை வகிக்கும்.

பியுபியுடனான இந்த தொடர் கூட்டுறவு முயற்சியால் ஐக்கிய நாடுகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக உலகச் சுகாதார அமைப்பின் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரச் சமூகக் காரணிகளுக் கான இயக்குநர் டாக்டர் மரியா நெய்ரா தெரிவித்தார்.