14 விழுக்காட்டினர் சொந்தத் தொழில் புரிகின்றனர்

சிங்கப்பூர் ஊழியரணியில் 14 விழுக்காட்டினர், அதாவது 300,500 பேர் சுயமாகத் தொழில் செய்வதாக மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்தார். இது 2015 ஜூன் மாத நிலவரம். அவர்களில் 93.1 விழுக்காட்டினர் சேவைத் துறையை, குறிப்பாக போக்குவரத்து, சேமிப்பகத் துறையைச் சேர்ந்தவர்கள். சொந்தமாக வர்த்தகம், தொழில் செய்வோரில் 169,500 பேர், வேலைக்கு வேறு ஆட்களை வைத்துக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவர்களில் 21.4 விழுக்காட்டினர் பட்டக் கல்வி முடித்தவர்கள்; 16.4 விழுக்காட்டினர் பட்டயக் கல்வியையும் நிபுணத்துவ கல்வித் தகுதியையும் கொண்டுள்ளனர். சுயதொழில் புரிவோர் தங்களது சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்காக தங்களது மெடிசேவ் கணக்கில் பங்களிக்க வேண்டும் என்றும் ஆயினும் டிசம்பர் 2015 நிலவரப்படி அவர்களில் 82 விழுக்காட்டினர் மட்டுமே தங்களது மெடிசேவ் கணக்கில் பணம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

தி ஆர்ட்ஸ் ஹவுஸில்  நேற்று நடந்த நிகழ்ச்சியில் மனித வள அமைச்சர் லிம் சுவீ சே.