அல்ஜுனிட்-ஹவ்காங்-பொங்கோல் ஈஸ்ட் நகர மன்றத்திற்கு 2014/2015, 2015/2016 நிதி ஆண்டுகளில் கிடைக்கவேண்டிய சேவைப் பராமரிப்புக் கட்டண மானியங்களை வழங்கப் போவதாக தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று அறிவித்தது. அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்திற்கும் பாசிர்ரிஸ்-பொங்கோல் நகர மன்றத்திற்கும் மானியத் தொகைகள் கிடைக்கும். பாட்டாளிக் கட்சி நடத்திய அல்ஜுனிட்- ஹவ்காங்- பொங்கோல் ஈஸ்ட் நகர மன்றத்தின் சேவைப் பராமரிப்புக் கட்டண மானியங்களை அமைச்சு வழங்கும்.
ஹவ்காங்-பொங்கோல் ஈஸ்ட் நகர மன்றத்தில் பல குறைபாடுகளையும் தவறுகளையும் அதன் சொந்த தணிக்கையாளர்களும் 2015 பிப்ரவரி 6ம் தேதியிடப்பட்ட தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் அறிக்கையும் அடையாளம் கண்டதைத் தொடர்ந்து நகர மன்றத்திற்குக் கிடைக்கவேண்டிய மானியத்தை அமைச்சு தரவில்லை. சென்ற ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியை மக்கள் செயல் கட்சியிடம் பாட்டாளிக் கட்சி பறிகொடுத்த பிறகு, அல்ஜுனிட்-ஹவ்காங்-பொங்கோல் ஈஸ்ட் நகர மன்றம் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றமாக மாற்றப்பட்டது.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் (இடது), பெங் எங் ஹுவாட். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்