இணையத்தின் எல்லையற்ற தன்மையினால் வளர்ந்து வரும் இணையக் குற்றங்கள் சிங்கப்பூரிலும் உலகமெங்கும் சட்ட அமலாக்கத் துறையினருக்கு பெரும் சவாலை ஏற்படுத்துகின்றன என்று அதிபர் டோனி டான் கெங் யாம் கூறியுள்ளார். சிங்கப்பூரர்களைக் குறிவைப்பவர்கள் நாட்டுக்கு வெளியே இருந்து வேலை செய்வதால், அவர்களை நீதிக்கு முன் நிறுத்துவது சிரமமாகி உள்ளது என்றார் டாக்டர் டான். போலிஸ் கேன்டோன்மண்ட் காம்ப்ளெக்சில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று வருகை மேற்கொண்ட அதிபர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வர்த்தகம், காதல் ஏமாற்றுகள் போன்ற இணைய ஏமாற்றுக் குற்றச்செயல்கள் 2014ஐ விட 2015ல் இரட்டிப்பாகி இருப்பதை அதிபர் குறிப்பிட்டார். "உலகிலுள்ள மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது குற்றச் செயல்களைத் தடுப்பதில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. ஆனால், நமக்குச் சவால்கள் இல்லை என்று கூறிவிட முடியாது," என்றார் அதிபர் டான். மேலும், பயங்கரவாத அச்சுறுத்தல் சிங்கப்பூர் போலிஸ் படைக்குத் தொடர்ச்சியான அக்கறையாக உள்ளது என்பதை டாக்டர் டான் சுட்டினார்.