8 பங்ளாதே‌ஷியருக்கு ஈராண்டு தடுப்புக் காவல்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பங்ளாதேஷ் நாட்டவர் எட்டுப் பேரை ஈராண்டு தடுப்புக் காவலில் வைக்குமாறு கடந்த மாதம் ஆணை பிறப் பிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. பங்ளாதே‌ஷின் இஸ்லாமிய நாடு (ஐஎஸ்பி) என்ற ரகசிய அமைப்பைச் சேர்ந்த அந்த எண்மரும் தங்களது சொந்த நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், சமயத் தீவிரவாதப் போக்குடைய எட்டு பங்ளாதே‌ஷியர் கைதான விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உலகத்திலும் இந்த வட் டாரத்திலும் சமயத் தீவிரவாத அலை பெருகி வருவதை இது காட்டுகிறது என்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித் துள்ளார்.

“அவர்கள் வெடிகுண்டு தயா ரிப்பது எப்படி என்று ஆராய்ந்து வந்துள்ளனர். அதிநவீன துப்பாக்கி கள் பற்றிய குறிப்புகள் அவர்களிடம் இருந்துள்ளன. அவர்கள் நிதி திரட்டியுள்ளனர், தாக்கவேண்டிய இலக்குகளைப் பட்டியலிட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பிற்கு உடந்தையாக இருக்க உறுதியளித்துள்ளனர். தமது அமைப்பிற்கு ‘பங்ளாதே‌ஷின் இஸ்லாமிய நாடு’ எனப் பெயரிட் டுள்ளனர். இவை மிகத் தீவிர மானவை,” என்று திரு சண்முகம் செய்தியாளர்களிடம் சொன்னார்.