உணவு தயாரிப்புத் துறையில் இளையரை ஈர்க்க புதிய முயற்சி

உணவு தயாரிப்புத் தொழில்துறைக்கு இளம் சிங்கப்பூரர்களை ஈர்க்க நேற்று புதிய செயல்திட்டம் தொடங்கப்பட்டது. ‘எஸ்ஜி உணவு தயாரிப்போர் செயல்திட்டம்’ என்று குறிப்பிடப்படும் அந்தத் திட்டத்தின்படி, குமாரி டாம் சியாக் போன்ற உணவு இணைய வலைப்பதிவாளர்கள் உணவு தயாரிப்பாளர்களை அணுகி, இத்தொழில்துறைப் பற்றிய கண்ணோட்டத்தை அவர்களுக்குப் போதிப்பார்கள். அதோடு, இத்தொழில் துறையைச் சேர்ந்த இளையர்கள் குழு ஒன்று குறும்படங்கள் மூலம் உணவுத் துறையைப் பற்றி எடுத்துக்காட்டும். இந்தப் படங்களை லா சால் கலைக் கல்லூரியைச் சேர்ந்த ஒளிபரப்புச் செய்தித் துறை மாணவர்கள் தயாரித்து இருக்கிறார்கள். உணவு தயாரிப்புத் துறை என்பது மங்கிவரும் துறை என்ற ஓர் எண்ணத்தை மாற்ற இந்தப் புதிய முயற்சி உதவும் என்று இந்தப் புதிய முயற்சியின் பின்னணியில் இருக்கும் சிங்கப்பூர் உணவு தயாரிப்பாளர்கள் சங்கம் நம்புகிறது.