கள்ளத்தனமாக கடத்தப்படவிருந்த சிகரெட்டுகள், புகையிலை பறிமுதல்

பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டு சட்ட விரோதமாக கடத்தப்பட முயன்ற 2,221 சிகரெட் பெட்டிகளும் 70 கிலோ புகையிலையும் துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டன. இந்த சிகரெட்டுகள், புகையிலைக்கான பொருள், சேவை வரியாக முறையே $199,810 மற்றும் $19,270 செலுத்தப் பட்டிருக்க வேண்டும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.

கடந்த ஞாயிறன்று அதிகாலை 5.50 மணிக்கு துவாஸ் சோதனைச் சாவடிக்கு வந்த மலேசியப் பதிவெண் கொண்ட அந்தப் பேருந்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் சிகரெட்டுகளும் புகையிலையும் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களும் அப்பேருந்தும் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. பேருந்தை ஓட்டி வந்த மலேசியரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.