ஃபேர்பிரைஸ் கடைகளில் தீட்டப்படாத அரிசிக்கு 5% விலை தள்ளுபடி

நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் முயற்சியாக தீட்டப்படாத அரிசிக்கு மூன்றுமாத காலத்திற்கு 5% விலை தள்ளுபடி தரப்போவதாக என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் விற்பனை செய்யும் தாய்லாந்து தீட்டப்படாத பழுப்புநிற அரிசி, தாய்லாந்து தீட்டப்படாத சிவப்பு அரிசி, வெள்ளை அரிசியும் பழுப்பு அரிசியும் சேர்ந்த கலவையான தாய்லாந்து கலப்பரிசி ஆகியவற்றுக்கு இந்த விலை தள்ளுபடி கிடைக்கும்.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் HCS முத்திரையைக் கொண்டுள்ள பொருட்களுக்கும் இரண்டு வாரத்திற்-கு 5% விலை தள்ளுபடி கொடுக்கப்படும் என்றும் இது தனது 133 பேரங்காடிகளிலும் நடப்பில் இருக்கும் என்றும் ஃபேர்பிரைஸ் குறிப்பிட்டுள்ளது. தீட்டப்படாத அரிசியில் உடலுக்கு உகந்த நார்ச்சத்தும் ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் வெள்ளை அரிசியைவிட அதிகமாக இருப்பதால் மக்கள் தீட்டப்படாத அரிசியை அதிகம் பயன்படுத்த இந்த விலைக் குறைப்பு ஊக்கமூட்டும் என்று நிறுவனம் நம்புகிறது.

ஃபேர்பிரைசின் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை சுகாதார அதிகாரிகளும் உடல் நல ஆதரவாளர்களும் வரவேற்று இருக்கிறார்கள். சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸீ யோங் காங், ஃபேர்பிரைஸ் வாடிக்கையாளர்களிடையே புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையில் இத்தகைய விலைக் குறைப்பை அமலாக்குவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.