மூன்று பறவைகளை இறக்குமதி செய்து துன்புறுத்திய ஆடவருக்கு மூன்று மாதச்சிறை

மூன்று சிவப்பு ‘புல்புல்’ பறவைகளைத் திருட்டுத்தனமாகக் கடத்தியத்திற்காகவும் அவற்றை கொடு மைப்படுத்தியத்திற்காவும் 47 வயது ஜலால் பசிரோன் சமாட் (படம்)) என்பவருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உரிமம் இல்லாமல் மலேசியாவிலிருந்து பறவைகளை இறக்குமதி செய்த குற்றத்தை அவர் ஒப்புகொண்டார். சென்ற மார்ச் மாதம் 4ஆம் தேதி லார்க்கின்,  ஜோகூருக்கு சென்று ர‌ஷிட் என்பவரிடம் 1,000 ரிங்கட் (S$331) கொடுத்து அந்த பறவைகளை வாங்கினாராம். அதன்பின், ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஒரு தனியார் வண்டியில், ஜலால், ஐந்து பயணிகளுடன் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை அடைந்தார்.

வழக்கமான பரிசோதனையின்போது அவர் அமர்ந்த முன் இருக்கையில் அவ ரின் பையில் அந்தப் பறவைகள் மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. பிவிசி குழாயில் இரண்டு பறவைகளும், பேப்பரில் சுற்றப்பட்டு இன்னொரு பறவையும் இருந்தன. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், தனக்கு நான்கு பள்ளி செல்லும் பிள்ளைகளையும் வயதான பெற்றோரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார். திரு ஜலாலுக்கு $10,000 வரை அபராதம் அல்லது ஒவ்வொரு குற்றத்துக்கும் 12 மாதம் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.