19 வயது பருவப் பெண்ணை அலைக்கழித்த ஆடவருக்குச் சிறை

பருவ வயது பெண் ஒருவரை ஓராண்டு காலமாக அலைக்கழித்து அந்தப் பெண்ணின் அந்தரங்கப் பகுதிகளைக் காட்டும் புகைப்படங்களைத் தரும்படி கோரிய வேலையில்லாத ஆடவர் ஒருவருக்கு 12 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அலைக்கழிப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாக ஒருவரை அலைக்கழித்ததாகக் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டிருக்கும் முதல் ஆடவர் இவர்தான்.

லாய் ஸி ஹெங், 26, என்ற அந்த ஆடவர் தன்னை அந்தப் பெண் சந்திக்கவில்லை என்றால், அந்தப் பெண் தனக்கு அவருடைய மேலும் பல நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பவில்லை என்றால் தன்னிடம் இருக்கும் அந்தப் பெண்ணின் நிர்வாணப் படங்களை அந்தப் பெண்ணுக்குத் தெரிந்த பலருக்கும் அனுப்பிவிடப் போவதாக அவரைத் திரும்பத் திரும்ப மிரட்டி வந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2014 நவம்பர் மாதத்திற்கும் சென்ற ஆண்டு நவம்பருக்கும் இடையில் அந்த ஆடவர் அந்த 19 வயது பெண்ணின் நிர்வாணப் படங்களை அந்தப் பெண்ணுடைய பள்ளிக்கூட மாணவர் மனமகிழ் மன்றத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். அதோடு மட்டுமின்றி, அலைக்கழிப்பு வாசகங்களுடன் அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகே அவர் ஒட்டிவைத்தார். சட்டவிரோதமாக அலைக்கழித்தது, மூர்க்கமாகச் செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.