அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்கு முன்கூட்டியே மனநல கவனிப்பு வேண்டும்

அதிர்ச்சி சம்பவத்தால் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முன்கூட்டியே மனநல சிகிச்சை அளிப்பது சிறந்தது என்று சாங்கி பொது மருத்துவமனை கூறி­யுள்ளது. அவர்களுக்கு முன் கூட்டியே மனநல சிகிச்சை அளிப்ப­தால் அவர்கள் மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்­றால் மேலும் மோசமாகப் பாதிக்கப்­படுவதைத் தடுத்து நிறுத்தலாம் என்றும் அது கூறியது.

சாங்கி பொது மருத்துவமனை­யில் 2007ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற சுமார் 6,000 நோயாளி­களுக்கு முன்கூட்டியே மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 33 விழுக்காட்டினருக்கு அதிர்ச்சிக்குப் பிந்தைய மன­நிலைக்­கான சிகிச்சை தொடர்ந்து தேவைப்பட்டது. இது அனைத்துலக கணக்கெடுப்பின்படி 10ல் ஒன்றாக உள்ளது என்கிறது அனைத்துலக ஆய்வு.

சாங்கி பொது மருத்துவமனை­யில் நேற்று ‘டிஆர்ஏசிஎஸ்’ மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சுகாதார துணை அமைச்சர் லாம் பின் மின், இது­போன்று அதிர்ச்சிக்கு பிந்தைய நிலையில் மனநிலை பாதிக்கப்­படுவோர் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 3.6% என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறியதைச் சுட்டிக்­ காட்டினார்.

“அதிர்ச்சி தரக்கூடிய ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அத னால் ஏற்படும் மன அழுத்தம் தொடர்பான நோய் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தப்படக் கூடியதாக இருக்கும். சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக அந்த நோய் எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் அந்த நோயைக் கண்டறிந்து குணப்படுத்த பல நிலைகளில் முறையான சிகிச்சை தேவை,” என்றார் அமைச்சர் லாம்.