மீண்டும் எலித் தொல்லை

சிங்கப்பூரில் எலிகள் மீண்டும் பகல் நேரங்களிலும் தலைக்காட்ட தொடங்கி இருக்கின்றன. பகலில் எலிகள் நடமாட்டம் இருந்தால் தொல்லை தரும் அளவிற்கு எலிகள் அதிகரித்து விட்டன என்பதே பொருள் என்று பூச்சிமருந்து நிறுவனங்களில் ஒன்றான பெஸ்ட் பர்ஸ்டர்ஸ் நிறுவனத் தலைவர் தாமஸ் பெர்னாண்டஸ் சொன்னார். எலிக்கடி தொடர்பிலான விவகாரங்கள் 20%க்கும் 60%க்கும் இடையில் அதிகரித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு எலி தொடர்பில் 1,563 பேர் தொடர்புகொண்டு விவரம் கேட்டனர். இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55% அதிகம். இந்த ஆண்டின் முதல் பாதியில் எலி தொடர்பில் 400 பேர் இந்த நிறுவனத்துடன் தொடர்புகொண்டு இருக்கிறார்கள்.

எலிகள் பதுங்கி வாழும் இடங்களைச் சோதனையிட்டு அவற்றை நன்கு பராமரிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். எலித் தொல்லைக்குச் சுத்தமில்லாமல் இருப்பதே முக்கிய காரணம். எலிகள் கூரிய பற்களால் மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களைச் சேதப்படுத்துவதோடு பல சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.