வில்சன் சைலஸ்
வாழ்க்கைமுறை குழப்பங்களைச் சமாளிப்பது, உணவில் மருந்து, உணவு ஒவ்வாமை, யோகாவில் சிரிப்புப் பயிற்சி போன்ற சுவாரசியமான நிகழ்ச்சிகளுடன் இன்று அறிமுகமாகிறது அனைத்துலக ஆயுர்வேத மாநாடு. சிங்கப்பூரின் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம், இந்திய தூதரகம், இந்தியாவின் ஆயுர்வேத அமைச்சு ஆகியவற்றால் முதன்முறையாக சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, இன்று ஷங்ரில்லா ஹோட்டலில் தொடங்குகிறது. கல்வி மற்றும் சமூக, குடும்ப மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர்க ளான டாக்டர் வர்ஷா சந்தோஷ், டாக்டர் ராம்குமார் குட்டி, டாக்டர் கங்காதரன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரை யாற்றுகின்றனர்.
"சிங்கப்பூரில் கடந்த 15 ஆண்டுகளில் ஆயுர்வேத மருத்துவம் நன்கு வளர்ந்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 12 ஆயுர்வேத நிலையங்கள் இங்கு செயல்படுகின்றன. இதுகுறித்த கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம்," என்று கூறினார் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும் ஆயுஷ் ஆயுர்வேத மருத்துவ நிலைய மருத்துவருமான டாக்டர் அஜித்குமார். பல்வேறு சமூக மன்றங்களில் பாரம்பரிய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேத வகுப்புகளை நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட டாக்டர் அஜித், பலரும் ஆயுர்வேதம் வழி பயனடைந்துள்ளதைப் பகிர்ந்துகொண்டார். இன்றைய மாநாட்டில் கிட்டத்தட்ட 200 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்கு அனுமதி இலவசம். இந்த ஒரு நாள் மாநாடு இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மேல் விவரங்களுக்கு www.ayurvedicpractitioners.org என்ற இணையத் தளத்தை நாடலாம்.