முஹம்மது ஃபைரோஸ்
சுவைமிகுந்த பிரியாணி வகைகளைச் சமைத்து சுவைக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது பிரசித்திபெற்ற இஸ்லாமிக் உணவகம். நார்த் பிரிட்ஜ் சாலை, கம்போங் கிளாம் பகுதியில் உணவகத்தின் அருகில் அதற்காக ஒரு சிறப்பு சமையல் கற்பிப்புக் கூடத்தை உணவகம் அமைத்துள்ளது. "சிங்கப்பூரின் முதல் 'ஹலால்' சமையல் வகுப்புக் கூடமான இங்கு ஒரே நேரத்தில் 20 பேர் சமையல் கற்கலாம்," என்று கூறினார் இஸ்லாமிக் உணவகத்தின் வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி திரு இர்ஃபான் அக்ரம், 27.
1921ல் தொடங்கப்பட்ட இஸ்லாமிக் உணவகத்தின் நான்காவது தலைமுறை உரிமையாளரான திரு கலிலூர் ரஹ்மானுக்கு தமது உணவகத்தின் சிறப்பு பிரியாணி வகைகளை பலருக்கும் சொல்லித் தர வேண்டும் என்ற அவா பல காலமாக இருந்து வந்தது. அதற்காக ஒரு ஹலால் சமையல் நிலையத்தை உருவாக்க நினைத்தார். போஸ், கன்வோதம், கென்வுட் போன்ற உள்ளூர் அனைத்துலக சமையல் வகுப்பு நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தன.
2013ன் நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அதிநவீன சமையல் கூடத்தின் தனிச் சிறப்பு இறைச்சி, கோழி பிரியாணி சமையல் வகுப்புகள். சமையல் வகுப்புகளில் பங்கு பெற முன்பதிவும் கட்டணங்களும் உண்டு. உணவு வகைகள் குறித்த ஆய்வு மேம்பாடு, பயிற்சிப் பட்டறைகள், நேர்காணல்கள், படப் பிடிப்பு போன்றவற்றுக்கும் தளமாக விளங்குகிறது இந்த சமையல் கூடம்.
கம்போங் கிளாம் பகுதியில் அமைந்துள்ள சமையல் வகுப்புக் கூடத்தில் பங்கேற்ற வர்களுக்கு 'இஸ்லாமிக்' உணவகத்தின் பிரபல பிரியாணியை சமைக்கச் சொல்லித் தரும் திருமதி ஹிடாயா பர்வீன்.