ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் தற்போது பேங்காக்கில் போலிஸ் காவலில் இருப்பவர் முதலில் சியாங் மாய்க்கும் பிறகு அங்கிருந்து துபாய்க்கும் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தாய்லாந்து போலிசார் நேற்று தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து கிடைத்த ஒரு குறிப்பேட்டில் தப்பிச் செல்வதற்கான விரிவான திட்டம் குறித்து வைக்கப்பட்டிருந்ததாகப் போலிசார் கூறினர். ஜூலை 7ஆம் தேதி ஹாலந்து வில்லேஜில் இருந்த வங்கியில் கொள்ளையடிப்பதற்கு 26 வயது கனடிய குடிமகன் டேவிட் ஜேம்ஸ் ரோச் ஒரு தாளைப் பயன் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தத் தாளில் எழுதப்பட்டிருந் ததாகச் சொல்லப்படும் அதே வரி கள் அவரிடமிருந்து கிடைத்த குறிப்பேட்டிலும் இருந்ததாகப் போலிசார் தெரிவித்தனர்.
"இது ஒரு கொள்ளை. என் னிடம் ஆயுதம் இருக்கிறது. என் னிடம் பணம் கொடு, போலிசாரை அழைக்காதே," எனத் தாளில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படு கிறது. சென்ற வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கிளைக் குள் நடந்து சென்று, தனது கோரிக்கைகள் எழுதப்பட்டிருந்த தாளை வங்கி ஊழியரிடம் ரோச் கொடுத்ததாகவும், சுமார் $30,000 பணத்துடன் தப்பிச் சென்றதாகவும் நம்பப்படுகிறது.
அதன்பிறகு, அதே நாளில் சிங்கப்பூரிலிருந்து ஏர் ஏஷியா விமானத்தில் புறப்பட்டு, தாய்லாந்து நேரப்படி மாலை 5 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணி) பேங்காக்கின் டொன் முவாங் விமான நிலையத்தில் அவர் தரையிறங்கினார். விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் வோர்ல்டுக்கு டாக்சியில் சென்றார். அங்கிருந்து தங்குவிடுதிக்கு நடந்து சென்றார்.
டாக்சி ஓட்டுநருடன் தொடர்பு கொண்டும், டாக்சியில் இருந்து இறங்கியபிறகு அவர் சென்ற பாதையிலிருந்த கண்காணிப்புக் கருவிகளில் பதிவாகியிருந்த காணொளியைப் பார்வையிட்டும் ரோச் இருக்கும் இடத்தை இரண்டு நாட்களில் கண்டுபிடித்ததாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தாய்லாந்து போலிஸ் கர்னல் நித்திதொர்ன் சின்டாக னோன் விவரித்தார். ஞாயிற்றுக்கிழமை ஜூலை 10ஆம் தேதி சுமார் 20 போலிசார் ரோச் இருக்கும் இடத்திற்குச் சென்று அவரைப் பிடித்தபோது ரோச்சிடம் 700,000 பாட் (S$27,000) மதிப்புள்ள அமெரிக்க டாலர், சிங்கப்பூர் வெள்ளி, தாய் லாந்து பாட் ஆகியவை இருந்தன.
கொள்ளைச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறையின் துணைத் தலைவர் தாய்லாந்து துணைப் பிரதமர் பிரவிட் வொங் சுவானுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியதாகத் தாய்லாந்து குடிநுழைவு காவல்துறை தலைவர் நதடொர்ன் பிராவ்சூன்டொர்ன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித் தாளிடம் நேற்று தெரிவித்தார். தாய்லாந்து போலிசார் ரோச்சை கைது செய்யவில்லை என்றும், தாய்லாந்தில் தங்குவதற்கான அவரது உரிமையை மட்டுமே ரத்து செய்தனர் என்றும் திரு நதடொர்ன் கூறினார். எனவே, ரோச்சை நீண்ட காலம் காவலில் வைத்தி ருக்க முடியாது என்றார் அவர்.
ரோச்சைக் கனடாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்க கனடிய அதிகாரிகள் முயற்சி எடுத்து வருவதாகவும் தாய்லாந்து போலிசார் தெரிவித்தனர். தாய்லாந்தின் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் ரோச் தாய்லாந்தில் தங்கி இருப்பதற்கான உரிமை ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ரோச்சை சிங்கப்பூரிடம் ஒப்ப டைக்கும் சாத்தியம் பற்றி குறிப்பிட்ட திரு சாய்ஜிண்டா, "எங் களுக்கும் சிங்கப்பூருக்கும் இடை யில் அயல்நாட்டவரை ஒப்படைப்ப தற்கான ஒப்பந்தம் செய்யப்பட வில்லை. சிங்கப்பூர் கனடாவுடன் பேச வேண்டியிருக்கலாம்," என்றார்.
ஆயினும், ரோச்சை திருப்பி அனுப்புவது குறித்து தாய்லாந்து வெளியுறவு அமைச்சு, தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம், சிங்கப்பூரிலுள்ள பொறுப்பதிகாரிகள் ஆகியோருடன் தாய்லாந்து போலிசார் தொடர்புகொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தாய்லாந்து தேசிய போலிஸ் படையின் துணைத் தலைவர்வுத்தி லிப்டாபலோப்பும் (இடது) தலைவர் ஜக்திப் சைஜிந்தாவும் செய்தியாளர் களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். படம்: ராய்ட்டர்ஸ்