உதவி தேவைப்படும் வசதி குறைந்த மாணவர்களும் உடற்குறையுள்ளவர்களும் பயனடையும் வகையில் நடப்பில் இருக்கும் 'கணினி இணைய இணைப்புச் சேவை திட்டம்' மேலும் பலர் பயன்பெற வேண்டும் என்பதற்காக மேம்படுத்தப்படுகிறது. தொடர்பு தகவல் துறை அமைச்சர் டாக்டர் யாக்கோப் இப்ராஹிம் இரண்டு புதிய மாற்றங்களை நேற்று முதல் முறையாக நடைபெற்ற 'இ2 கனெக்ட்' கருத்தரங்கில் அறிவித்தார். தகவல் தொடர்பு ஆணையத்தின் 'என்இயு பிசி ப்ளஸ்' திட்டத்தின் வழி பயன் பெறுபவர்கள் புதிய கணினிகளை 75 விழுக்காடு வரை மலிவுக் கட்டணத்தில் வாங்குவதுடன் மூன்று ஆண்டுகள் இலவச இணையச்சேவையையும் பெறலாம். செப்டம்பர் முதல் தேதியிலிருந்து குடும்பத்தின் மாதாந்தர வருமான உச்சவரம்பு $3,000ல் இருந்து $3,400க்கு அதிகரிக்கப்படும்.
இந்த மாற்றத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 5,000 குடும்பங்கள் பயனடையும். மேலும் கல்வி அமைச்சின் சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் வழி பயன்பெற்று வரும் மாணவர்கள் இனி நேரடியாக இந்தத் திட்டத்தின் வழி உதவித்தொகை பெறுவார்கள். தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூட வசதிகளைக் கொண்ட பேருந்து குறித்தும் அவர் இன்று அறிவித்தார். இந்தச் சிறப்புப் பேருந்து சமூக மன்றங்கள், வணிக மையங்கள் சிறப்புப் பள்ளிகள் ஆகிய இடங்களுக்கு செல்லும். "கொள்கை வகுப்பாளர்கள் என்ற முறையில் அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழலை உருவாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பையும் கொள்கைகளையும் வழங்குவது தங்களின் பொறுப்பு,'' என்று டாக்டர் யாக்கோப் குறிப்பிட்டார். தகவல் தொடர்பு ஆணையத்தின் துணைத் தலைமை நிர்வாகி லியோங் கென் தாய் கூறுகையில், "அறிவுசார்ந்த தேசம் மக்களைப் பற்றியது; தொழில்நுட்பத்தை சார்ந்தது மட்டுமல்ல. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் திடமான சமூகங்களைக் கட்டிக்காப்பதும்; எல்லோருக்கும் பயன்படும் ஒன்றாக உள்ளது தொழில்நுட்பம்," என்றார் அவர்.
உடற்குறையுள்ளோர் சிரமமின்றி கணினி, இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் உதவும்- தொழில் நுட்பம் பற்றி கேட்டு அறிந்து கொள்கிறார் அமைச்சர் யாக்கோப் இப்ராஹிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்