'எஸ்பிஎச் மேகசின்ஸ்' ஏற்பாட்டில் 'ஷேப் ரன்' 11வது ஓட்டப் பந்தய நிகழ்ச்சி நேற்று பே ஃபிரண்ட் பகுதியில் நடைபெற்றது. அதில் சிங்கப்பூரில் முதன்முதலாக பெண்களுக்கான 15 கி.மீ., ஓட்டப் பந்தயம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 'மெர்லயன் பூங்கா', சிங்கப்பூர் ராட்டினம், கரையோரப் பூங்கா என்று சிங்கப்பூரின் அழகை ரசித்துக் கொண்டே ஓடும் வகையில் ஓட்டத்தைத் தொடங்கும் இடமும் முடிக்கும் இடமும் அமையப் பெற்றிருந்தது நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது.
2006ஆம் ஆண்டு முதல் ஷேப் சிங்கப்பூர் மேகசின் இந்த ஓட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஓட்டத்தில் 9,500க்கு மேற்பட்டோர் பங்குபெற்றனர். 5 கி.மீ., 10 கி.மீ., 1.8 கி.மீ குடும்ப ஓட்டம் என நான்கு வகையான ஓட்டப் பந்தயங்கள் இடம்பெற்றன. 15 கி.மீ., ஓட்டத்தில் ஓங் கைஃபென், 10 கி-.மீ, ஓட்டத்தில் விவியன் டேங், 5 கி-.மீ., ஓட்டத்தில் சுஸென்னெ வால்ஷம் ஆகியோர் முதலிடத்தில் வந்தனர். அனைத்து வெற்றியாளர்களும் ரொக்கப் பரிசான $300ஐ தட்டிச் சென்றனர்.
குடும்ப ஓட்டத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 15 கி.மீ., பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் அடுத்த சவாலான அரை அல்லது முழு மாரத்தோன் நெட்டோட்டத்தில் கலந்துகொள்வதற்கு அவர்களைத் தயார்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் பதிவுக் கட்டணத்தின் மூலம் கிடைத்த தொகை யாவும் உடற்குறையுள்ள சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சமூக சேவை மையமான 'லைஃப் கம்யூனிட்டி சர்வீசஸ்' சங்கத்திற்கு அளிக்கப்பட்டது.
கரையோரப் பூந்தோட்டப் பகுதியில் எஸ்பிஎச் நிறுவனத்தின் சஞ்சிகைகள் பிரிவு ஏற்பாடு செய்திருந்த 'ஷேப் ரன்' ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடும் மகளிர். படம்: எஸ்பிஎச்