எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் நீக்கம்; சங்கம் முறையீடு

எஸ்எம்ஆர்டி வழித்தடத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த உயிர்பலி விபத்தில் சம்பந்தப்பட்டிருந்த இரண்டு ஊழியர்களை எஸ்எம்ஆர்டி நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியிருந்தது. அந்த ஊழியர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் முறையீடு செய்திருக்கிறது. பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையம் அருகே மார்ச் 22ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் ரயிலில் அடிப்பட்டு எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் இருவர் மாண்டுவிட்டனர். அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ரயிலை ரஹ்மட் முகம்மது, 49, என்பவர் ஓட்டி வந்தார். எஸ்எம்ஆர்டி நடத்திய புலன்விசாரணையை அடுத்து சென்ற வாரம் ரஹ்மட் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பில் எஸ்எம்ஆர்டியின் வேறோர் ஊழியரும் வேலையிலிருந்து விலக்கப்பட்டார்.

இந்த விவகாரங்களை தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் பரிசீலித்து இருக்கிறது என்றும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் தான் செய்துள்ள முறையீட்டில் அது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது என்றும் இந்தச் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மெல்வின் யோங் தெரிவித்தார். “இதன் தொடர்பில் எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடமிருந்து பதிலுக்காகக் காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு தொடர்ந்து உதவுவோம், ஆதரவு அளிப்போம்,” என்றார் அவர்.

Loading...
Load next