திருடிய ஐபேட் சாதனத்தை அதே கடை அருகே விற்க வந்த திருடர்கள்

கேலாங்கில் திருட்டுக் கும்பல் ஒன்று தாங்கள் திருடிய பொருளைக் காசாக்க முட்டாள்தனமானகாரியத்தைச்செய்து மாட்டிக் கொண்டதாக சீனமொழி செய்தித் தாட்கள் திங்கட்கிழமை தெரிவித்தன. கேலாங் லோரோங் 14ல் இருக்கும் ஒரு கடையிலிருந்து $1,188 மதிப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட ஐபேட் ஒன்று திங்கட்கிழமையன்று பிற்பகலில் திருட்டுப்போனது. அன்று பிற்பகல் சுமார் 2 மணிக்கு அந்தக் கடைக்கு இரண்டு பேர் வந்ததாகவும் அவர்களில் ஒருவர் செல்பேசியை வாங்க விரும்பியதாகவும் திரு லி, 25, என்று மட்டும் தன்னை அடையாளம் தெரிவித்துக்கொண்ட கடை ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக லியான்ஹ வான்பாவ் செய்தித்தாள் குறிப்பிட்டது.

அப்போது மற்றொருவர் கடையில் இருந்த ஐபேட் சாத னத்துடன் கம்பியை நீட்டிவிட்டார். அதுபற்றி தெரியவந்த உடனேயே அந்தப் பகுதியில் உள்ள கடைகளுக்கு அத்திருட்டு பற்றி அந்த ஊழியர் தெரிவித்தார். திருடர்கள் ஐபேட் சாதனத்தை இணையத்தில் விற்றிருக்க வேண்டும் அல்லது அதை வேறு எங்கேயாவது எடுத்துச் சென்று இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். இருந்தாலும் நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை.

அந்தத் திருடர்கள் ஒரு பெண்ணுடன் அன்றே மாலை சுமார் 6 மணிக்கு கேலாங்கிற்கே திரும்பி, திருட்டுப்போன கடைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு கடையில் அதை விற்க முயன்றனர். அதுபற்றி அங்கு இருந்த ஊழியர் திரு லிக்குத் தகவல் தெரிவித்தார். சில ஊழியர்களுடன் திரு லி அங்கு போனார். திருடர்களை அணுகியபோது அவர்களில் ஒருவர் கத்தி போன்ற ஆயுதத்தை வெளியே எடுத்தாக திரு லி சொன்னார். என்றாலும் ஊழியர்கள் அவரை மடக்கிவிட்டனர். அப்போது உடன் வந்த பெண்ணும் வேறு ஓர் ஆடவரும் ஓடி விட்டனர். பிறகு போலிசிடம் அவர்கள் பிடிபட்டனர்.

Loading...
Load next