தீமிதித் திருவிழா 2016

இவ்வாண்டு தீமிதித் திருவிழா அடுத்த மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தலைமைப் பண்டாரம் புறப்பட்டுச் செல்வார். இரவு 8 மணி அளவில் அவர் தீக்குழியைக் கடப்பார் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீக்குழியைக் கடந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். தீமிதித் திருவிழாவுக்கு முன்பாக அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று சிறப்பு விரத வழிபாடு நடத்தப்படும்.

அக்டோபர் மாதம் 7ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சனம் ஆகியவற்றை செய்யலாம். தீமிதி நாளான 23ஆம் தேதியன்று கோயிலில் கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சனம் ஆகியவற்றை செய்ய முடியாது. அடுத்த மாதம் 7ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் மாவிளக்கு செலுத்தலாம். தீமிதித் திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 21, 22ஆம் தேதிகளில் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறும். தீமிதத் திருவிழாவுக்கு மறுநாள் இரவு சுமார் 8 மணிக்கு சிராங்கூன் சாலையில் திரௌபதி அம்மன் வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறும்.

Loading...
Load next